ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் இடங்களில் அமெரிக்கா தாக்குதல்
ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் இடங்களில் அமெரிக்கா தாக்குதல்
ADDED : பிப் 03, 2024 11:55 PM

வாஷிங்டன்: ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.
மேற்காசிய நாடான ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள், அந்த பிராந்தியத்தில் உள்ள ஈராக், சிரியா, ஜோர்டானில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேல் -நடத்தி வரும் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், பயங்கரவாதிகள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக, ஜோர்டானில் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என, எச்சரித்திருந்தது.
இதன்படி, ஈராக் மற்றும் சிரியாவில், பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறி வைத்து, அமெரிக்க விமானப் படை போர் விமானங்கள் நேற்று முன்தினம் கடும் தாக்குதலில் ஈடுபட்டன. இதன்படி, 85 இடங்களில், 125 ஏவுகணைகளை அமெரிக்க போர் விமானங்கள் செலுத்தின. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
''மேற்காசியா உட்பட உலகின் எந்தப் பகுதியிலும் போர், மோதல்கள் இருக்கக் கூடாது என்பதே எங்களுடைய விருப்பம். அதே நேரத்தில், எங்களுடைய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடியை கொடுப்போம்.
''வெறும் பதிலடி அல்ல, அடிவேர் வரை பயங்கரவாதத்தை ஒழிப்போம்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.