டிரம்ப் தந்த பதவியில் இருந்து வெளியேறினார் விவேக் ராமசாமி
டிரம்ப் தந்த பதவியில் இருந்து வெளியேறினார் விவேக் ராமசாமி
ADDED : ஜன 22, 2025 01:38 AM

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்த, சிறந்த அரசு நிர்வாகத்துக்கான துறை துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து, இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி விலகினார். ஓஹியோ கவர்னராக போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவின், 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியான உடன், அரசு நிர்வாகத்தில் உள்ள குழப்பங்களை சீரமைக்கும் வகையில், சிறந்த அரசு நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா துறை ஒன்றை உருவாக்குவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
'டெஸ்லா' நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமி ஆகியோர் தலைமையில், இந்த துறை செயல்படும் என்று கூறியிருந்தார்.
டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், இந்த துறையில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி, 39, அறிவித்துள்ளார்.
ஓஹியோ மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலில் போட்டியிட, விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து, டிரம்ப் வழங்கிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் விவேக் ராமசாமியும் இருந்தார்.
ஆனால், அதிக ஆதரவு கிடைக்காத நிலையில், போட்டியில் இருந்து விலகி, டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டிரம்பின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
அமெரிக்காவில் இதுவரை இரண்டு இந்திய வம்சாவளியினர் மட்டுமே, மாகாண கவர்னர்களாக இருந்துள்ளனர். லுாசியானாவின் கவர்னராக பாபி ஜிண்டால், தெற்கு கரோலினாவின் கவர்னராக நிக்கி ஹாலே இருந்துள்ளனர்.