வடகொரியா தாக்கும் வரை காத்திருக்கணுமா? நட்பு நாடுகளை சீண்டிய உக்ரைன் அதிபர்
வடகொரியா தாக்கும் வரை காத்திருக்கணுமா? நட்பு நாடுகளை சீண்டிய உக்ரைன் அதிபர்
UPDATED : நவ 02, 2024 08:04 AM
ADDED : நவ 02, 2024 07:42 AM

கீவ்: வடகொரியா ராணுவ வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வரும் நிலையில், தனது நட்பு நாடுகளின் நிலைப்பாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு, போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். விரைவில் போர் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய ராணுவத்தை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக, 3,000 வடகொரிய ராணுவ வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருகிறது. வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையான கூட்டு வைத்துக் கொண்டு, ஆயுதங்களையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கி குவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள வடகொரிய ராணுவத்தினர் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த நட்பு நாடுகள் அனுமதியளிக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, வடகொரியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் வரை தங்களின் நட்பு நாடுகள் காத்திருக்கின்றன, எனக் காட்டமாக கூறியுள்ளார்.