துபாய் கோல்டன் விசா: யார் யாருக்கு தகுதி இருக்குன்னு தெரியுமா?
துபாய் கோல்டன் விசா: யார் யாருக்கு தகுதி இருக்குன்னு தெரியுமா?
UPDATED : ஆக 27, 2024 09:06 AM
ADDED : ஆக 27, 2024 08:30 AM

துபாய்: துபாய் கோல்டன் விசா பெற்று விட்டால் போதும்; துபாயில் மட்டுமல்ல, அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் கைவைன் போன்ற பிற எமிரேட்களிலும் வேலை செய்யவும், முதலீடு செய்யவும் முடியும்.
எண்ணற்ற வாய்ப்புகள்
ஒரு காலத்தில் நியூயார்க் அல்லது பாரிஸ் போன்ற நகரங்களில் குடியேற வேண்டும் என மக்கள் கனவு கண்டு கொண்டு இருந்தனர். தற்போது அந்த காலம் மாறி, துபாயில் குடியேற மக்கள் விரும்பும் காலம் வந்துவிட்டது. அந்தளவுக்கு மக்கள் வாழ்வாதாரத்திற்கு சிறந்த நகரம் என்று பெயரை பெற்றுள்ளது துபாய். தற்போது தொழில், வணிகத்துறையில் நம்பமுடியாத வளர்ச்சி அடைந்து சாதனை படைத்து வருகிறது. தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளையும் அளிக்கிறது.
'கோல்டன் விசா'
துபாய் வர விரும்புவோருக்காக, கடந்த 2019ம் ஆண்டு துபாய் கோல்டன் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இது நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலீடு செய்ய வழிவகுத்தது.
கோல்டன் விசா வைத்திருந்தால், துபாயில் மட்டுமல்ல, அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் கைவைன் போன்ற பிற எமிரேட்களில் வேலை செய்யவும், முதலீடு செய்யவும் முடியும்.
தகுதிகள் என்ன?
* முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், இன்ஜினியர்கள், விளையாட்டு வீரர்கள், சிறந்த மாணவர்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் மற்றும் எந்தவொரு துறையிலும் வல்லுனர்களாக இருப்பவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது. டாக்டர்கள் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள் எளிதில் விசாவை பெற முடியும்.
* கோல்டன் விசா ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் அதே விதிமுறைகளின் கீழ் எளிதாக புதுப்பிக்கப்படும்.
* தங்கள் விருப்பப்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழையலாம் அல்லது வெளியேறலாம். தொழில்முனைவோர் வெற்றியையும் செழிப்பையும் அனுபவிக்க முடியும். கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினர், வீட்டு உதவியாளர்களுக்கும் துபாய் வருவதற்கு ஸ்பான்சர் செய்யலாம்.
* இந்த விசா இருந்தால், துபாயில் தொழில் நடத்த முடியும்; உங்கள் நிறுவன ஊழியர்களை நீங்களே தேர்வு செய்யவும் முடியும்.
* முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹாம்களை முதலீடு (4.56 கோடி ரூபாய்) செய்ய வேண்டும்.
* கோல்டன் விசாவிற்கான விண்ணப்பத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்கலாம்.