எச்சரிக்கை!லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி: செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டம்
எச்சரிக்கை!லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி: செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டம்
ADDED : ஏப் 06, 2024 11:19 PM

நியூயார்க்: இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தேர்தல்களில் தலையிடும் வகையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது என, 'மைக்ரோசாப்ட்' மென்பொருள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லோக்சபாவுக்கான 543 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ல் துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
ஆபத்து
இதுபோல, ஆசிய நாடான தென் கொரியாவில், வரும் 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவம்பரில் நடக்க உள்ளது.
உலக அரங்கில், தன் புவி அரசியல் நலன்களை பாதுகாப்பதற்காக, இந்த நாடுகளின் தேர்தல்களில், சீனா தலையிடும் என, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் ஆபத்து ஆய்வு மையத்தின் பொது மேலாளர் கிளின்ட் வாட்ஸ் எச்சரிக்கை விடுத்துஉள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டு உலகின் பல நாடுகளில் தேர்தல்கள் நடக்க உள்ளன. இவற்றில் இந்தியா, தென்கொரியா பார்லிமென்ட் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை,
உலகின் மிகப் பெரும் சக்தியாக மாறுவதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மற்ற நாடுகளின் தேர்தல்களில் அது தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழப்பம்
குறிப்பாக இந்தியா, தென்கொரியா, அமெரிக்க தேர்தலில், சீனா தலையிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
தன் புவி அரசியல் நலன்களுக்காக இந்த நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுஉள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இந்தியாவில் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர்கள் முடிவு எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பல வகையான சமூக வலைதள பிரசாரங்களில் சீனா ஈடுபடும். இதற்கு முன்னும், இதுபோல சில நாடுகளின் தேர்தல்களில் சீனா தலையிட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் தற்போதைய தேர்தலில், சீனாவின் இந்த பிரசாரத்தால் பெரிய அளவு தாக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கிறோம்.
அதே நேரத்தில் தன்னை வலுப்படுத்தி கொள்ள, மேம்படுத்தி கொள்ள, இதை ஒரு வாய்ப்பாக சீனா பயன்படுத்த உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

