இந்தியா - பாக்., போரை நாங்கள் தான் நிறுத்தினோம்: ஐ.நா.,விலும் அமெரிக்கா வீம்பு
இந்தியா - பாக்., போரை நாங்கள் தான் நிறுத்தினோம்: ஐ.நா.,விலும் அமெரிக்கா வீம்பு
ADDED : ஜூலை 24, 2025 01:53 PM
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 25வது முறையாக கூறியுள்ள நிலையில், ஐ.நா.,விலும் இதை அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பதிலுக்கு நம் நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.
நான்கு நாட்கள் நீடித்த இந்த சண்டையை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா நிறுத்தியது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'நான் தான் இந்த போரை நிறுத்தினேன்' என கூறி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இதை மறுத்து கூறியுள்ள போதிலும், தொடர்ந்து அதே பல்லவியை டிரம்ப் பாடி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த, குடியரசு கட்சி எம்.பி.,க்களுடனான விருந்து நிகழ்ச்சியில் பேசியபோதும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பேசிய, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் டோராத்தி ஷியா, 'இந்தியா - பாகிஸ்தான் போரை அதிபர் டிரம்ப் நிறுத்தினார்' என, குறிப்பிட்டார்.