ஒருபோதும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்: உக்ரைன் துாதர்
ஒருபோதும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்: உக்ரைன் துாதர்
ADDED : ஆக 30, 2025 05:49 AM

கீவ் : “எங்கள் நிலத்தை ரஷ்யாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்; மேலும், ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மாட்டோம்,” என, இந்தியாவுக்கான உக்ரைன் துாதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்கி, ரஷ்யா பயனடைந்து வருகிறது. இதில் பிரச்னை என்னவென்றால், வர்த்தகத்தில் கிடைக்கும் நிதியை ரஷ்யா சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், போருக்கு பயன்படுத்தி வருகிறது.
தற்போது, அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வரும் ஆண்டுகளில் ரஷ்யா தன் சமூக நல திட்டங்களுக்கான நிதியளிப்பில் சவால்களை சந்திக்க உள்ளது-.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை பொறுத்தவரை, ரஷ்யாவுக்கு எங்கள் நிலத்தை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். மேலும், ரஷ்யாவிடம் சரணடையும் கோரிக்கையையும் ஏற்கமாட்டோம்.
போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியில் இந்தியாவின் பங்களிப்புக்கும், பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அரசிடம் இருந்து இந்த அசைக்க முடியாத ஆதரவை நாங்கள் எதிர்பார்த்தோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்திய பயணம் விரைவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

