ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விட மாட்டோம்; அதிபர் பைடன் ஆவேசம்
ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விட மாட்டோம்; அதிபர் பைடன் ஆவேசம்
ADDED : ஜன 03, 2025 07:30 AM

வாஷிங்டன்: 'ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லென்ஸ் நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது, வாகனம் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர், முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜாபர் என்றும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன், சம்சுதீன் ஜாபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் வீடியோக்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், ஜோ பைடன் கூறியதாவது: ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அமெரிக்காவில் பாதுகாப்பான சூழலை உணர மாட்டார்கள். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். நியூ ஆர்லியன்ஸில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
தாக்குதல் குறித்து எப்.பி.ஐ., அதிகாரிகள் எனக்கு விளக்கம் அளித்தனர். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டார். தாக்குதலுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடிய வெளிநாட்டு அல்லது உள்நாட்டு தொடர்புகள் குறித்து உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

