அமெரிக்க அதிபர் தேர்தலில் அவங்களுக்கு என்ன வேலை; ஈரான், ரஷ்யா, சீனா மீது குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் தேர்தலில் அவங்களுக்கு என்ன வேலை; ஈரான், ரஷ்யா, சீனா மீது குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2024 07:32 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஈரானை சேர்ந்த 3 ஹேக்கர்கள் தலையிடுவதாக கூறியுள்ள விசாரணை குழுவினர், அவர்கள் டிரம்ப் பிரசார குழுவை குறிவைத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தலையிடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரானை சேர்ந்த 3 ஹேக்கர்கள், டிரம்ப்பின் பிரசாரத்தை ஹேக் செய்யவும், சைபர் தாக்குதல் நடத்தவும் முயன்றனர். ஈரானுக்காக செயல்பட்ட இவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து நீண்ட நாட்களாக சதி செயலில் ஈடுபட்டனர். டிரம்ப் பிரசாரம் குறித்த தகவல்களை திருடி பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஜோ பைடன் குழுவினருடன் தொடர்புடையவர்களுக்கும் அனுப்பினர். டிரம்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்ற வகையில் இவர்கள் செயல்பட்டு உள்ளனர். ஹேக்கிங்கில் ஈடுபட வேண்டும் என்பதற்காக முழு அளவில் தயாராகி வந்துள்ளனர். அதிபர் பிரசார குழுவினருடன் தொடர்புடையவர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற இவர்கள் முயற்சித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஈரான் தலையீடு குறித்து கடந்த மாதம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா, சீனா மீதும் குற்றச்சாட்டு
அதிபர் தேர்தலில் தலையிடுவதாக ரஷ்யா, சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கமலா ஹாரீசை ஆதரிப்பதாக டிரம்ப் குழுவினர் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அதேபோல், ரஷ்ய ஊடகங்களும் தலையிடுகிறது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தங்களுக்கு கொள்கைக்கு ஏதுவாக யார் இருப்பார்கள் என கருத்தில் கொண்டு சீனாவும், தலையிடுகிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இதனை இரண்டு நாடுகளும் மறுத்துவிட்டன.