ADDED : செப் 27, 2024 02:14 AM
பீஜிங், கிழக்கு லடாக்கில், 2020 மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீற முயன்றதையடுத்து, இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. அதே நேரத்தில் மேலும் சில இடங்களில் உள்ள படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்னையே, இரு தரப்பு உறவு பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜாங்க் ஜியாங்காங் நேற்று கூறியுள்ளதாவது:
எல்லையில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக, இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேசியுள்ளனர்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். தொடர்ந்து தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறோம். இதைத் தவிர, ராணுவ நிலையிலும் பேச்சு நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுகளின் அடிப்படையில், சில கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளன. சில விஷயங்களில் ஒருமித்த கருத்தும் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், படைகளை முழுமையாக விலக்கி கொள்வதில் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து இந்தியாவுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.