காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
ADDED : மார் 30, 2025 10:11 AM

கார்டஜனா (கொலம்பியா): காற்று மாசு மூலம் ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகளை, 2040ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் குறைப்பதாக சர்வதேச மாநாட்டில் உலக நாடுகள் உறுதி அளித்துள்ளன.
உலக சுகாதார நிறுவனம் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் சுகாதாரம் தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாடு கொலம்பியா நாட்டின் கார்டஜனா நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், வரும் 2040ம் ஆண்டுக்குள் காற்று மாசு தொடர்பான நோய் பாதிப்புகளை 50 சதவீதம் குறைப்பதாக உறுதி அளித்தனர்.
இதில் இந்தியா சார்பில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குனர் ஆகாஷ் ஸ்ரீவத்சவா பேசியதாவது: வரும் 2040ம் ஆண்டுக்குள் காற்று மாசுபாடு மூலம் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளை கணிசமாக குறைக்க இந்தியா உறுதி ஏற்கிறது. நோய் பாதிப்புகளை சமாளிக்க சுகாதாரத் துறைக்கு தேவையான உதவிகளும் செய்யப்படும்.
இதற்கென தேசிய அளவில் சுத்தமான காற்று என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. சமையல் செய்வதற்கு, எரிவாயு வழங்குவதன் மூலம் சுகாதார பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
காற்று மாசுவை கண்காணிக்கவும் அதன் மூலம் நோய் பரவல் தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.