அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? விறுவிறுப்பாக துவங்கியது ஓட்டுப்பதிவு
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? விறுவிறுப்பாக துவங்கியது ஓட்டுப்பதிவு
ADDED : நவ 06, 2024 02:17 AM

வாஷிங்டன் அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது. அந்நாட்டு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிலவுவதால், 50 மாகாணங்களிலும் மக்கள் திரளாக வந்து ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 60, போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால், கடும் போட்டி நிலவுகிறது.
மொத்த வாக்காளர்கள் 24.4 கோடி. இங்கு முன்கூட்டியே ஓட்டு போடும் வசதி இருப்பதால், 7.5 கோடி பேர் ஏற்கனவே ஓட்டளித்துள்ளனர்.
அந்நாட்டு வழக்கப்படி, நவம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமைக்கு மறுநாள் ஓட்டுப்பதிவு நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கும், அமெரிக்க நேரப்படி காலை 6:00 மணிக்கும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
அமெரிக்க மாகாணங்களுக்கு இடையேபல நேர மண்டலங்கள் உள்ளன. இதில், கிழக்கு நேர மண்டலத்தில் உள்ள எட்டு மாகாணங்களில் முதலில் ஓட்டுப்பதிவு துவங்கியது.
கனெக்டிகட், நியூ ஜெர்சி, நியூயார்க், நியூ ஹாம்ப்ஷயர், விர்ஜினியா மாகாணங்கள் கிழக்கு நேர மண்டலத்தில் உள்ளன.
நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டிக்ஸ்வில் நாட்ச் என்ற சிறிய நகரம் ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் இடமாக அறிவிக்கப்பட்டது.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' என்றழைக்கப்படும் அலைபாயும் மாகாணங்களாக ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெற்றி பெறுபவருக்கே அதிபராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அமெரிக்க நேரப்படி காலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர்.
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, முக்கிய அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை மற்றும் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடமான கேப்பிடோல் ஹில் ஆகியவை தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.