இந்தியாவுக்கு அதிக வரி ஏன்? அமெரிக்காவின் மழுப்பல் பதில்
இந்தியாவுக்கு அதிக வரி ஏன்? அமெரிக்காவின் மழுப்பல் பதில்
UPDATED : ஆக 21, 2025 03:00 AM
ADDED : ஆக 21, 2025 01:06 AM

வாஷிங்டன்:'உக்ரைனுடனான போரை முடிவுக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் தருவதற்காகவே, அதனிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தோம்' என அமெரிக்கா மழுப்பலான பதிலை அளித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பல நாடுகளுக்கும் இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்தது. அதில் இந்தியாவுக்கு 25 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தவிர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீதம் என, மொத்தம் 50 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது.
அதே நேரத்தில், இந்தியாவைவிட அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ரஷ்யா போரை கைவிட அதிபர் டிரம்ப் மிகப்பெரிய அழுத்தம் தந்தார். இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்.
இது ரஷ்யாவுக்கு அழுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பின்னும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா குறைக்கவில்லை என்று, நம் நாட்டுக்கான ரஷ்யாவின் வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்தார்.
இந்திய பொருட்களை
வரவேற்கும் ரஷ்யா!
இந்தியாவுக்கான ரஷ்யாவின் துணை துாதர் ரோமன் பாபுஷ்கின் கூறியதாவது: இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தைக்குள் நுழைவதில் சிரமங்களை எதிர்கொண்டால், இந்திய இறக்குமதியை ரஷ்ய சந்தை வரவேற்கும். இந்தியாவுடனான எங்களின் உறவு மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகளாக இது போன்ற தடைகளை பார்த்து வருகிறோம்.
ஆனால், எங்கள் வர்த்தகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவை நட்பு நாடாக நினைத்தால் அமெரிக்கா இதுபோல் நடந்துகொள்ளாது. இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்ததற்கும், உக்ரைனுடனான போருக்கும் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. இந்தியா எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றாலும், மேற்கத்திய நாடுகள் ஒத்துழைப்பு வழங்காது. அவர்கள் புதிய காலனித்துவ சக்தியை போன்று நடந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.