சிரியா முன்னாள் அதிபரை விவாகரத்து செய்ய மனைவி முடிவு
சிரியா முன்னாள் அதிபரை விவாகரத்து செய்ய மனைவி முடிவு
ADDED : டிச 24, 2024 03:50 AM

மாஸ்கோ : ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா முன்னாள் அதிபர் பஷர் அல்ஆசாத்திடம் இருந்து, அவரது மனைவி அஸ்மா அல்ஆசாத் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
மேற்காசிய நாடான சிரியா அதிபராக இருந்தவர் பஷர் அல்ஆசாத். பஷரின் குடும்பம், சிரியாவை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வந்தது.
இவரது அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை, 2011 முதல் போரிட்டு வருகிறது. பல்வேறு நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டமாஸ்கஸ்சை சமீபத்தில் சூழ்ந்தனர்.
இதை தொடர்ந்து, பஷர் அல்ஆசாத், சிரியாவை விட்டு தப்பிச் சென்று ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். அவருடன் அவரது மனைவி அஸ்மா அல்ஆசாத் மற்றும் மூன்று பிள்ளைகளும் ரஷ்யா சென்றனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ள பஷர் குடும்பத்துக்கு, அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பஷருக்கு சொந்தமான 270 கிலோ தங்கம், 17,000 கோடி ரூபாய் ரொக்கம், மாஸ்கோவில் உள்ள 18 சொத்துக்களை ரஷ்ய அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளால், பஷரின் மனைவி அஸ்மா விரக்தி அடைந்துள்ளதாகவும், எனவே, பஷரிடம் இருந்து விவாகரத்து கோரி ரஷ்ய அரசிடம் அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதை ரஷ்ய அரசு பரிசீலித்து வருகிறது. பஷரின் மனைவி அஸ்மா, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், சிரியா நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு 1975ல் பிறந்தார்.
அவர், சிரியா மற்றும் பிரிட்டன் குடியுரிமை வைத்துள்ளார். எனவே, பஷரை விவாகரத்து செய்துவிட்டு லண்டனில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.