அமெரிக்க அதிபர் தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது: முதல் பெண் அதிபராக கமலா சாதிப்பாரா?
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது: முதல் பெண் அதிபராக கமலா சாதிப்பாரா?
UPDATED : நவ 05, 2024 04:59 PM
ADDED : நவ 04, 2024 11:47 PM

வாஷிங்டன் : அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு, அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையிலான இந்த போட்டியில், மக்கள் தீர்ப்பு வழங்கும் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியது.
கடந்த 236 ஆண்டுகளாக அதிபர் அந்தஸ்துடன் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் வெள்ளை மாளிகையில், முதல் முறையாக ஒரு பெண் குடியேறுவாரா அல்லது அடாவடி பேச்சுக்கு பெயர் பெற்ற கோடீஸ்வரரே மீண்டும் நடை போடுவாரா என்ற கேள்விக்கு, 24.5 கோடி வாக்காளர்கள் பதிலளிக்கின்றனர்.
உலகின் வலிமை மிக்க ஜனநாயக நாடு அமெரிக்கா. இங்கு, 1788ல் துவங்கி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கிறது. இன்று நடப்பது, 60வது தேர்தல். வர இருப்பவர், 47வது அதிபர். இரு முறைக்கு மேல் எவரும் அதிபராக இருக்க முடியாது. மொத்த வாக்காளர்கள், 24 கோடியே 4 லட்சம். முன்கூட்டியே ஓட்டு போடும் வசதி இங்கு உண்டு. அதன்படி, 7.5 கோடி பேர் ஓட்டு போட்டுள்ளனர். இன்றைய ஓட்டுப்பதிவு, இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கியது. நாளை காலை 6:30 மணி வரை நடக்கிறது. போர் உட்பட உலகளாவிய பல பிரச்னைகள் நிலவும் சூழலில், வல்லரசான அமெரிக்காவின் அதிபராக வரப்போவது யார் என்பதை அறிய, உலகமே ஆர்வமாக இருக்கிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளராக, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 60, போட்டியிடுகிறார். இந்திய மற்றும் ஆப்ரிக்க வம்சாவளியான இவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றவர். குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, களத்தில் உள்ளார்.
முதல் முறையாக, இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்புகளில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். ஆனாலும், வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. ஐம்பது மாகாணங்களில் சில குடியரசு கட்சிக்கும், சில ஜனநாயக கட்சிக்கும் பாரம்பரியமாக ஆதரவு தந்து வருகின்றன. அந்த வகையில், இவை மூன்று பிரிவாக பார்க்கப்படுகின்றன.
இதுவரை நடந்த, 59 தேர்தல்களில் ஜனநாயக கட்சியின், 16 பேரும், குடியரசு கட்சியின், 19 பேரும் அதிபராகி உள்ளனர். கடந்த, 1920ல் அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இதுவரை ஒரு பெண் அதிபராக வரவில்லை. முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், 2016ல் ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பாப்புலர் ஓட்டு எனப்படும், பொதுமக்கள் ஓட்டுகள் இவருக்கு அதிகமாக கிடைத்தன. 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் பிரதிநிதிகள் குழுவின் ஓட்டுகள் குறைவாக கிடைத்ததால், அந்த தேர்தலில் டிரம்பிடம் தோற்றார் ஹிலாரி.
துணை அதிபரான முதல் பெண் என்ற பெருமை பெற்ற கமலா, அதைவிட பெரிய பதவியை கைப்பற்றி சாதிப்பாரா என, உலகம் முழுவதும் பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமலாவின் வெற்றி சர்வதேச அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுக்கு ஆரம்பமாகக் கூடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். எனினும், ஊடகங்களால் கோமாளியாக சித்தரிக்கப்படும் டிரம்ப் மீது, நிறைய பேருக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதால், அவருடைய வாய்ப்பை குறைத்து மதிப்பிட முடியாது.
அமெரிக்க அதிபர் தேர்வாவது எப்படி?
அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தல் முறை மிக நீண்டது மற்றும் பல கட்டங்களைக் கொண்டது. மக்கள் ஓட்டளித்தாலும், அவர்கள் அதிபரை நேரடியாக தேர்வு செய்ய மாட்டர்கள்.ஒவ்வொரு கட்டமும் ஏற்கனவே திட்டமிட்ட நாட்களில் தான் நடக்கும். அதிபர் தேர்தல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். பதவிக்காலம் முடியும் ஜனவரிக்கு முன் வரும் முந்தைய ஆண்டின் நவ., மாதத்தில், முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் தான் ஓட்டுப் பதிவு நடக்கும். அதன்படி இன்று அங்கு தேர்தல் நடக்க உள்ளது. அமெரிக்காவில் உள்ள மாகாணங்களுக்கு இடையே, பல நேர மண்டலங்கள் உள்ளன. அதனால், உள்நாட்டு நேரப்படி காலை 7:00 அல்லது 9:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கும்.
யார் ஓட்டுப் போடலாம்?
அமெரிக்க குடியுரிமை பெற்ற, குறிப்பிட்ட மாகாணத்தில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டளிக்கலாம். இது மாகாணத்துக்கு மாகாணம் இடையே மாறுபடும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஓட்டளிக்க சில மாகாணங்களில் தடை உள்ளது. கடந்த, 2020 தேர்தலில், 66 சதவீத மக்களே ஓட்டளித்தனர். கடந்த, 100 ஆண்டுகளில் இதுவே அதிகம்.
வேட்பாளர்கள் யார்?
வேறு சில கட்சிகளின் சார்பில் சிலர் போட்டியிட்டாலும், அமெரிக்காவில் இரண்டு கட்சிகளே பிரதானமாக உள்ளன. அதன்படி, ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், 6-0, போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார்.
எலக்டோரல் காலேஜ்
அதிபர் தேர்தலில், மக்கள் அதிபர் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்தாலும், அதனடிப்படையில் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் அளிக்கும் ஓட்டுகள், ஒவ்வொரு மாகாணத்திலும், குறிப்பிட்ட கட்சிக்கு எத்தனை பிரதிநிதிகள் கிடைப்பர் என்பதை உறுதி செய்யும். இவ்வாறு மாகாணங்களில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் ஓட்டளித்தே, அதிபரை தேர்வு செய்கின்றனர். இதுவே, எலக்டோரல் காலேஜ் எனப்படுகிறது.
பார்லிமென்டில், செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபையில், ஒவ்வொரு மாகாணத்துக்கும் எவ்வளவு எம்.பி.,க்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதே அளவுக்கு, அந்த மாகாணத்தில் இருந்து எலக்டோரல் காலேஜ் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.
தற்போது அமெரிக்காவில், 538 எம்.பி.,க்கள் உள்ளனர். அதன்படி, 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையிலேயே, அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்வு செய்யப்படுவர். மொத்தம், 270 பேரின் ஆதரவு பெற்றவரே வெற்றியாளர்.
பாப்புலர் ஓட்டு
மக்கள் அளிக்கும் ஓட்டுகளே பாப்புலர் ஓட்டு என்றழைக்கப்படுகிறது. அதாவது, எந்த ஒரு கட்சி அல்லது அதிபர் வேட்பாளர் மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளார் என்பதை குறிப்பதே பாப்புலர் ஓட்டு. ஆனால், பாப்புலர் ஓட்டு அதிகம் பெற்றவரே அதிபராவார் என்று கூற முடியாது. எலக்டோரல் காலேஜ் பிரதிநிதிகள் அளிக்கும் ஓட்டுகளே வெற்றியாளரை நிர்ணயிக்கும்.
கடந்த, 2016 தேர்தலில், டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு, 30 லட்சம் கூடுதல் பாப்புலர் ஓட்டுகள் கிடைத்தன. ஆனால், எலக்டோரல் காலேஜ் ஓட்டெடுப்பில், டிரம்புக்கு, 304 ஓட்டுகளும், ஹிலாரி கிளின்டனுக்கு 227 ஓட்டுகள் கிடைத்தன.
அலைபாயும் மாகாணங்கள்
பெரும்பாலான மாகாணங்களில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். கடந்த, 1992ல் இருந்து சில மாகாணங்கள், தங்களுடைய ஆதரவை மற்றொரு கட்சிக்கு மாற்றும் நிலைப்பாடு அதிகரித்துள்ளது. அந்தாண்டு நடந்த தேர்தலில், 22 மாகாணங்கள், தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றின.
கடந்த, எட்டு அதிபர் தேர்தல்களில், 26 மாகாணங்கள் இவ்வாறு குறைந்தபட்சம் ஒரு தேர்தலிலாவது தங்களுடைய ஆதரவை மாற்றியுள்ளன.
இந்த தேர்தலில், இவ்வாறு அலைபாயும் ஏழு மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நவேடா, வடக்கு கரோலினா, பென்னில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய இந்த ஏழு மாகாணங்களே, யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் மற்றவர்கள்
மக்கள் அளிக்கும் ஓட்டுகளில், அதிபர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதைத் தவிர, காங்கிரஸ் எனப்படும் பார்லிமென்டின் இரு சபைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.,க்களும் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் சபையில், 435 இடங்களுக்கும், செனட்டில் காலியாக உள்ள 34 இடங்களுக்கும் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதைத் தவிர சில இடங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முடிவுகள் எப்போது வெளியாகும்?
வழக்கமாக தேர்தல் நாளிலேயே முடிவுகள் தெரியவரும். ஆனாலும், சில மாகாணங்களில் வேட்பாளர்களுக்கு இடையேயான வித்தியாசம் குறைவாக இருந்தால், முடிவுகள் வெளியாவதற்கு தாமதமாகலாம். புதிய நிர்வாகம், நியமனங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக, தேர்தலுக்குப் பிந்தைய காலம், 'டிரான்சிஷன்' எனப்படும் ஆட்சி மாற்றம் காலம் என்றழைக்கப்படுகிறது. ஜனவரியில் அதிபர் பதவியேற்கும் நிகழ்ச்சியை, இன்னாகுரேஷன் என்று அழைக்கின்றனர்.
பெரும்பான்மை கிடைக்காவிட்டால்?
எந்த ஒரு வேட்பாளருக்கும், எலக்டோரல் காலேஜின், 270 ஓட்டுகள் கிடைக்காதபட்சத்தில், மாற்று முறை பயன்படுத்தப்படும். இதன்படி, மக்கள் பிரதிநிதிகள் சபை ஓட்டளிக்கும். ஒரு மாகாணத்துக்கு ஒரு ஓட்டு கிடைக்கும். இதில், 26 ஓட்டுகள் பெற்றவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதே நேரத்தில், செனட் சபை, துணை அதிபரை தேர்வு செய்யும்.
கடந்த, 1824ல் ஆன்ட்ரூ ஜாக்சன், பாப்புலர் ஓட்டுகள் அதிகம் பெற்றும், எலக்டோரல் காலேஜின் பெரும்பான்மையை பெறவில்லை. ஜான் குயின்சி ஆடம்ஸ், மக்கள் பிரதிநிதிகள் சபையால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய நாட்கள்
2024, நவ., 5 - தேர்தல் ஓட்டுப் பதிவு-
நவ., 6 - டிச., 11 - சான்றிதழ் வழங்கும் காலம்
டிச., 17 - எலக்டோரல் காலேஜ் ஓட்டு
2025, ஜன., 6 - எலக்டோரல் காலேஜ் அளிக்கும் ஓட்டுகள் எண்ணப்படும்
2025, ஜன., 20 - அதிபர் பதவியேற்பு
- நமது சிறப்பு நிருபர் -