மகனை கொன்ற வழக்கில் அமெரிக்கா தேடிய பெண் இந்தியாவில் சிக்கினார்
மகனை கொன்ற வழக்கில் அமெரிக்கா தேடிய பெண் இந்தியாவில் சிக்கினார்
ADDED : ஆக 22, 2025 12:20 AM
நியூயார்க்,:ஆறு வயது மகனை கொடூரமாக கொன்றதாக, 'மோஸ்ட் வான்டட்' எனப்படும் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட பெண்ணை, இந்திய அதிகாரிகள் துணையுடன் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த சிண்டி ரோட்ரிக்ஸ் சிங், 40. கடந்த 2022ம் ஆண்டு, தன் 6 வயது மகன் நோயல் ரோட்ரிக்ஸ் அல்வாரெஸைக் கொலை செய்ததாக சிண்டி ரோட்ரிக்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயலுக்கு உணவு, தண்ணீர் தராமல் சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மூடநம்பிக்கை காரணமாக சிண்டி ரோட்ரிக்ஸ், பெற்ற மகனையே கொன்றதாக அக்கம் பக்கத்தினர் விசாரணையில் தெரிவித்தனர்.
இதையடுத்து, டெக்சாஸ் நீதிமன்றம் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கிற்கு மரண தண்டனை விதித்து, 2023ல் தீர்ப்பளித்தது. நாட்டை விட்டு தப்பியோடாமல் இருக்க, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னதாகவே சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் தன் கணவர் மற்றும் ஆறு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு தப்பினார்.
இதையடுத்து, தேடப்படும் முக்கிய 10 குற்றவாளிகளின் பட்டியலில் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் சேர்க்கப்பட்டார். மேலும், அவர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு, 22 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று, எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் பதுங்கியிருந்த சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கை, இந்திய அதிகாரிகளின் உதவியுடன் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். உடனடியாக அவர் நாடு கடத்தப்பட்டு, டெக்சாஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.