மகளிர் ஜூனியர் டி20 உலகக் கோப்பை; இந்தியா சாம்பியன்
மகளிர் ஜூனியர் டி20 உலகக் கோப்பை; இந்தியா சாம்பியன்
UPDATED : பிப் 04, 2025 09:14 PM
ADDED : பிப் 02, 2025 02:49 PM

கோலாலம்பூர்: மகளிர் 19 வயதுக்குட்பட்டோர் டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. இன்று கோலாலம்பூரில் பைனல் நடந்தது. இன்று (பிப்.,02) நடந்த பைனலில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதியது. இந்தியா, தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முதலில் பேட்டிங் செய்த, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய வீராங்கனை கோங்கடி திரிஷா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்கள் என்ற இலக்கை 11.2 ஓவர்களில் எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக இந்தியா வென்றுள்ளது. திரிஷா கொங்கடி 44 ரன்னும், சால்கே ஜோடி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; சிறந்த குழுப்பணி மற்றும் உறுதியான செயல்பாடுகளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பல விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளையில், உலகக்கோப்பையை வென்ற ஜூனியர் டி20 மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.