காஷ்மீரில் மின் நிலையம்: உலக வங்கி 'சப்போர்ட்'; பாகிஸ்தான் 'கப்சிப்'
காஷ்மீரில் மின் நிலையம்: உலக வங்கி 'சப்போர்ட்'; பாகிஸ்தான் 'கப்சிப்'
UPDATED : ஜன 22, 2025 04:00 AM
ADDED : ஜன 22, 2025 03:07 AM

புதுடில்லி : சிந்து நதியின் குறுக்கே ஜம்மு - காஷ்மீரில் இரண்டு நீர்மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பான பிரச்னையில், நடுநிலை நிபுணர் குழுவே விசாரிக்க முடியும் என்ற உலக வங்கியின் உத்தரவுக்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவை தொடர்பான விவகாரத்தில், இந்தியா மற்றும் நம் அண்டை நாடான பாகிஸ்தான் இடையே, 196-0ல் உடன்படிக்கை ஏற்பட்டது. இதில், உலக வங்கியும் ஒரு தரப்பாக கையெழுத்திட்டது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், கிஷண்கங்கா மற்றும் ராட்டில் என, இரண்டு நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையேயான இந்த பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்ய, நடுநிலை நிபுணர் குழு மற்றும் தீர்ப்பாயத்தை அமைத்து உலக வங்கி, 2022ல் உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நடுநிலை நிபுணர் குழுவே விசாரிக்க முடியும் என்பது மத்திய அரசு தரப்பு வாதமாகும். அதே நேரத்தில் தீர்ப்பாயமே முடிவு செய்ய முடியும் என்று பாகிஸ்தான் வாதிட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்த உலக வங்கி, நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான பிரச்னையை, நடுநிலை நிபுணர் குழுவே விசாரிக்க முடியும் என, தற்போது கூறியுள்ளது. இதற்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் தரப்பு எந்த கருத்தையும் கூறவில்லை.