/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் 'கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்'
/
நொய்டா கோவிலில் 'கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்'
டிச 09, 2024

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், இந்தியா / உலகளவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களில் நடைபெறுவது போலவே, நொய்டா செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நடத்தப்பட்டது. கார்த்திகை சோமவார ஷங்காபிஷேகத்திற்குப் பிறகு, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரை காண பக்தர்கள் நொய்டா மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்திலிந்தும் வந்தார்கள். இதையொட்டி, ஸ்ரீ திருபுரசுந்தரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக் கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது.
சிவபுராணத்தின் படி, இதை கடைபிடிப்பது தொழில், வணிகம் மற்றும் உறவுகளில் வெற்றியை கொண்டு வர உதவுகிறது மற்றும் மன அமைதி, நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளையும் தருகிறது. சோமவாரத்தில் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் விரதம் அனுஷ்டிப்பது ஒருவருக்கு தனது வாழ்க்கைத் துணையைப் பெற உதவும்.
அனைத்து பூஜைகளும் ஸ்ரீராம் சாஸ்திரிகள், சங்கர் சாஸ்திரிகள் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, பிரஹலாதரன், ஹரி, மீனாட்சிசுந்தரம் மற்றும் ரிஷி ஆகியோரால் செய்யப்பட்டன. பக்தர்கள் ஸ்தோத்திரம் மற்றும் இதர ஸ்லோகங்களைச் சொல்லி சிவனைப் போற்றி பாடிக்கொண்டிருந்தனர். மகா ஆரத்திக்குப் பிறகு, அங்கிருந்த அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்