/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம்
/
ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம்

தலைநகர் கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயம் காருண்ய மகா கணபதி ஆலயம் உட்பட பல ஆலயங்களில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஐப்பசி பௌர்ணமி அன்று உலகத்தில் உள்ள அத்தனை சிவன் கோயிலில் அன்னாபிஷேகம் செய்யப்படுவதை காண்கிறோம். ஐப்பசி மாத பௌர்ணமி - “அன்னாபிஷேக வழிபாடு”. “திங்கள் முடி சூடியவர்க்கு மதி முழுமையாக இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்வதுதானே சாலபொருத்தமானதானதாகும்.
உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படையே அன்னம்தான். உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக, ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது அன்னாபிஷேகத்தை கோவிலுக்குச் சென்று கண் குளிரக் கண்டு கோடி லிங்கங்களை தரிசனம் செய்த பலன் கிட்டும்
'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பது பழமொழி. அதாவது இந்த அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் கூற்றுப்படி நமது உடலுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் தலைவன் சிவபெருமான்.அந்த பஞ்சபூதங்களை ஒருமித்து செயல்பட வைத்து, எல்லா உயிர்களுக்கும் உணவும் நீரும் குறைவின்றி கிடைக்கச் செய்த சிவபெருமானுக்கு, நன்றி சொல்லும் வகையிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும், இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தான் உருவாகிறது. நிலத்தில் விதைக்கும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரினால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தால் பால் இறுகி நெல் ஆகிறது. பின் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் போட்டு, காற்றின் உதவியால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள எல்லா உயிர்களுக்கும் உணவாகிறது.
அந்த பஞ்ச பூதங்களால் உருவான அன்னம், அவற்றைப் படைத்த இறைவனுக்கே அர்ப்பணிக்கப் படுகின்றது. பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களால் உருவான அரிசி - அன்னம் எப்படி இறைவனுக்குப் போய்ச் சேருகின்றதோ, அதேபோல பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய உயிர்களும் ஒருநாள் இறைவனிடம் போய்ச் சேரவேண்டும் என்றால், அரிசி பக்குவப்பட்டு உணவாகி சேருமிடம் சேருவதுபோல் உயிர்களும் பக்குவப்பட்டு சேருமிடம் சேரவேண்டும் என்பதே அன்னாபிஷேகத்தின் தத்துவம்.
அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால், பஞ்ச பூதங்களை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.
சிவபெருமானுக்கும், சந்திர பகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஒருமுறை சந்திரனின் மாமனார் தட்சனால் ஏற்பட்ட சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். சந்திரன் சிவபெருமானால் சாபம் நீங்க பெற்று, சிவபெருமானின் தலையில் பிறை சந்திரனை அணிகலனாக அணியப்பெறும் பாக்கியம் பெற்றான். எனவே தான் நமது புராணங்கள் சிவபெருமானை “பிறைசூடன், சந்திரசேகரன்” என்கிற பல பெயர்களில் சிவன் மற்றும் சந்திரனின் புகழை போற்றுகின்றனர்.
சிவபெருமானின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும். அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். சந்திரனை முடிசூடியவருக்கு, சந்திரன் முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சந்திரனுக்கு உரிய தானியமாகிய அரிசியை அன்னமாக்கி, ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.
அறிவியல் ரீதியாக ஐப்பசி பவுர்ணமி:
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் ஐப்பசி பவுர்ணமிக்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் (ஐப்பசி) சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும். அப்போது சந்திரன் மிக அதிக ஒளியுடன் காட்சி தருவதாக அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடையாகும் பருவ காலம் ஐப்பசி மாதம். அப்போது அந்த புதிய நெல்லைக் குத்தி அந்த அரிசி கொண்டு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் அது வழக்கத்தில் உள்ளது.
சமீப காலமாக அன்னாபிஷேகத்தின் போது காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்கிறார்கள். சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள்.
சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள்.
கீழ்ப்பகுதி-பிரம்ம பாகம்.
நடுப்பகுதி- விஷ்ணு பாகம், இதுவே ஆவுடை.
மேற்பகுதி பாணம்-சிவபாகம்.
அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். இந்த அன்னாபிஷேகம் மாலையில் நடைபெறுகிறது. அந்த நேரத்தில் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். அந்த நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பிறகு இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து எடுத்த அன்னத்தை தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது. நீர் நிலைகளில் அன்னம் கரைக்கப்படுவதால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னாபிஷேகத்துக்கு கைப்பிடி அரிசியேனும் வழங்குவது சிறப்பு
'அன்னம் பர பிரம்மம்' என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி 'அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
'எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினமான சிவாலயங்களிலும் 'அன்னாபிஷேகம்' கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான்.
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி