
புதுதில்லி : ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, வெள்ளிக்கிழமை பிற்பகலில் சரோஜினி நகர் சித்தி புத்தி சமேத ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ ஓங்காரேஸ்வருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பழங்கள், காய்கறிகள், இனிப்புகள், மலர்களை கொண்டு லிங்கத்திற்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் சுவாமி மீது சாத்தி இருந்த அன்னம், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் அன்னாபிஷேக சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சாகம்பரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னம் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் என்பது சிவாலய விழாக்களில் ஒன்றாகும். சோற்றை வடித்து ஆறவைத்து அதனை தெய்வத்திருமேனியில் சாற்றி, அதன் மீது அதிரசம், வடை போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்து, வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால், தயிர், தேன், கரும்புச்சாறு போன்ற பொருட்களின் வரிசையில், அன்னத்தையும் அபிஷேகம் செய்வர். சிதம்பரத்தில், ஸ்படிக லிங்க மூர்த்திக்குத் தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகத்திற்கென்றே ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் அஸ்வினி திருநாளைக் குறித்து வைத்துள்ளனர். இந்த நாளில், பிற்பகலில் சிறப்பாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்