
புதுடில்லி: புதுடில்லியில்
அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி மந்திர் (பி.சி. பிளாக், சாலிமார் பாக்),
ஸ்ரீராம் மந்திர் (7வது செக்டார், துவாரகா), ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்
(சரோஜினி நகர்), பூர்த்தி அபார்ட்மெண்ட், (விகாஸ்புரி) மற்றும் ஸ்ரீ
ஜயப்பன் கோவில் (7வது செக்டார், ரோகிணி), உட்பட பல இடங்களில் இன்று ஆவணி
அவிட்ட தினத்தன்று பூணூல் மாற்றும் வைபவம் புரோகிதர்கள் அருண் சாஸ்திரிகள்
(சாலிமார் பாக்), சரவணன் சாஸ்திரிகள் (துவாரகா), ஆனந்த் சாஸ்திரிகள்
(சரோஜினி நகர்), சீனிவாசன் சாஸ்திரிகள் (விகாஸ்புரி) மற்றும் பரசுராம
சாஸ்திரிகள் ( ரோகிணி) தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலக நலன்,
சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்காக பிரார்த்தனை
செய்து, ஏராளமானோர் புதிய பூணூல் மாற்றினர்.
ஆவணி மாத பவுர்ணமி
திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள், ஆவணி அவிட்டமாக
கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பழைய பூணூலை மாற்றி, புதிய பூணூல்
அணிவர். முறையாக காயத்ரி மந்திரம் உபநயனம் செய்த பிராமணர்கள், இதை
மேற்கொள்வர். இந்த சடங்கு முறைக்கு, 'உபாகர்மா' என்று பெயர்.
ஆன்மாவின் தூய்மை
வேத
மந்திரங்களை ஓதுவதற்கும், புனித நூல்களைப் பயில்வதற்கும் உகந்த நாளாகக்
கருதப்படுகிறது. இந்த நாளில், புரோகிதர்கள் தங்கள் புனித நூல் (பூணூல்)
மாற்றுவது வழக்கம். இது அவர்களின் ஆன்மிக பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக்
குறிக்கிறது. பூணூல் மாற்றுதல், உடல், மனம் மற்றும் ஆன்மாவின் தூய்மையை
உறுதிப்படுத்துவதற்காகவும், புதிய உறுதிமொழிகளை ஏற்பதற்காகவும்
செய்யப்படுகிறது.
இந்த நாளில், வேத மந்திரங்களை உச்சரிப்பதற்கு
முன், காயத்ரி மந்திரத்தை 1008 முறை ஜபிப்பது மிகவும் புனிதமாகக்
கருதப்படுகிறது. காயத்ரி மந்திரம், அறிவு, ஞானம் மற்றும் ஆன்மிக
விழிப்புணர்வை வளர்க்க உதவுவதாக நம்பப்படுகிறது. இதனால், ஆவணி அவிட்டம்
நாள் ஆன்மிக பயிற்சிகளுக்கு மிகவும் சக்தி வாய்ந்த நாளாக அமைகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
