
புதுடில்லி அருணா அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91வது ஜெயந்தி இன்று மிகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ரித்விக்குகள் திரளாக பங்கேற்று ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர்.
கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தோடகாஷ்டகம் சொல்லி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர்.
மாலை உபநிஷத் வேத பாராயணம், பாதுகை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவப் படத்துடன் மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலம்
நடந்தது.
நிகழ்ச்சியில், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக பங்களிப்பு குறித்து கோவில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன் பேசியதாவது :
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சாரியாராக திகழ்ந்தவர். வேதாந்தம், ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது போதனைகள், ஆன்மீக அறிவு மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தியது. வயதாகி உடம்பு ஒத்துழைக்காத வேளையில் கூட அவரது ஆன்மிகப் பணிகள் ஓயவே இல்லை. அவரிடமிருந்து கற்க வேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே நம்மை ஆச்சர்யப்படுத்துபவை. இவ்வாறு அவர் பேசினார்.
- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன் .
