/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
பால்ஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருது - 2025
/
பால்ஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருது - 2025
பால்ஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருது - 2025
பால்ஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருது - 2025
செப் 30, 2025

நவராத்திரி விழாவை ஒட்டி, மிருதங்க இசைக் கலைஞர் திருவாரூர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை, ரோகிணி மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமாஜம், ரோகிணி அமைப்புடன் இணைந்து, 28 செப்டம்பர் மாலை புதுடில்லி ரோகிணி 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் கர்நாடக இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தது.
பி. கே. குருவாயூரப்பன், எம். மது நாராயணன், எம்.ராமச்சந்திரன், வசந்தா சுந்தரம், ஹர்ப்ரீத் கவுர் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினர்.
எஸ். விக்னேஷின் வயலின் இசைக் கச்சேரியுடன் மாலைப் பொழுது துவங்கியது. விக்னேஷ் ஜெயராமன் மிருதங்கமும் மற்றும் எம். ஸ்ரீராம் கடமும் வாசித்தனர். அதைத் தொடர்ந்து டில்லி சகோதரிகள் ஷைலஜா - செளந்தர்யாவின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. எஸ். விக்ணேஷ் வயலினும், விக்னேஷ் ஜெயராமன் மிருதங்கமும் மற்றும் எம். ஸ்ரீராம் கஞ்சிராவும் வாசித்தனர்.
வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த எட்டு வருடமாக இசைத் துறையில் சாதிக்கும் இசைக் கலைஞர்களுக்கு ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த வருடம்,கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் டில்லி சகோதரிகள் ஷைலஜா-செளந்தர்யா (சுனாத கலாமணி) பரதநாட்டியக் கலைஞர் ஹிமான்ஷி கோயல் (நிருத்ய கலாமணி) வயலின் இசைக் கலைஞர் எஸ். விக்னேஷ் (யுவ காந்தர்வ வாத்ய மணி) கடம்-கஞ்சிரா இசைக் கலைஞர் எம். ஸ்ரீராம் (சுனாத லய மணி) ஆகியோருக்கு 2025 வருடத்திற்கான சிறந்த இசைக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட எஸ். விஜயராணி (கூடுதல் இயக்குநர் ஜெனரல், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம்) கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லிக் கம்பன் கழகத் தலைவர், கே.வி.கே.பெருமாள், பி. கே. குருவாயூரப்பன், தலைவர், ஸ்ரீஅய்யப்பன் கோவில், ரோகிணி, சிறப்பு விருந்தினர் ஹர்ப்ரீத் கவுர், நிறுவனர், நிருத்ய வாடிகா அகாதமி, ரோகிணி ஆகியோர், கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டி பேசினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகி எம். வீ. தியாகராஜன் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
விழாவில் பேசிய ஸ்ரீ ஐயப்பன் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் குருவாயூரப்பன், டி எஸ் ஸ்ரீராம் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகளைப் பட்டியலிட்டு, அதன் அறங்காவலர் எம். வி. தியாகராஜனைப் பாராட்டினார்.
பின்னர் பேசிய தில்லிக் கம்பன் கழக நிறுவனர் - தலைவர் கே வி.கே. பெருமாள், கலை மற்றும் இலக்கியங்களில் மேலை நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டினார். 'கலைகளை நாம் தெய்வத் தன்மையோடு பார்க்கிறோம். மேலும் எல்லாவற்றிலும் அறம் வேண்டும் என்று நினைப்பது நம்முடைய தேசத்தின் பண்பாடு. ஆனால், வெற்றிதான் முக்கியம் என்று கற்றுக் கொடுப்பது மேலைநாடுகளில், 'ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்' என்று கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் போரிடும் போது கூட நிராயுத பணியாக நின்ற இராவணனை, 'இன்று போய் போருக்கு நாளை வா' என்று ஸ்ரீ ராமபிரான் சொன்னதாகக் கற்றுக் கொடுத்து, போரிலும் அறம் வேண்டும் என வலியுறுத்துவது நமது இதிகாசமான இராமாயணம்' என்றார்.
மத்திய அரசின் நிதித்துறை அதிகாரி விஜயராணி பேசும்போது, 'வள்ளுவரின் வாக்கினுக்கிணங்க, தோன்றிற் புகழோடு தோன்றிய டிஎஸ் ஸ்ரீராம் சிறுவயதிலேயே மேதையாகத் திகழ்ந்தார். அவரது திறமைக்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். ஹிமான்சி போன்ற வட இந்தியக் குழந்தைகள, பரதக் கலையை கற்றுக் கொண்டு அதிலே சிறப்புடன் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலர் எம். வி. தியாகராஜன் செய்திருந்தார். நிகழ்ச்சியை அதிதி நேகி தொகுத்து வழங்கினர். முரளி, அனில் சர்மா மற்றும் கணபதிராமன் ஆகியோர் மேடையில் விருதுகளை வழங்கும்போது ஒருங்கிணைந்து உதவினர். இசை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்