
சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் 12 டிசம்பர், ஒரு இனிய காலைப் பொழுதினில் ' 'சங்கீத ஞானமு' என்ற அமைப்பினர் ஓர் அழகிய தேரோட்டத்தை நடத்தினர். நான்கு தூண்களின் மேல் கோபுர அமைப்பு, சுழலும் மேடையில் சமயக் குரவர் நால்வருடைய விக்ரகங்கள். அருகே இசை வழி இறை பக்திக்காகவே வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் சீர்காழி மூவர்.
கபாலீஸ்வரர் ஆலயத்திலிருந்து மங்களயிசை நாதஸ்வரத்தில் செம்பரனார் கோவில் மோகன்தாஸ் குழுவினர் வாசிக்க, ஓதுவார் சற்குருநாதர் தேவாரம் ஓத, வருண பகவான் அருள் போல் மழை பொழிய, இந்த அமைப்பின் புரவலர் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் சார்பாக அட்வகேட் வரலக்ஷ்மி கொடியசைக்கத் தேர் புறப்பட்டு ரசிக ரஞ்சனி சபாவை வந்தடைந்தது.
ரசிக ரஞ்சனி சபாவின் வாயிலில் கயிலை வாத்தியத்துடன் வரவேற்பு. வெளியேயும் உள்ளேயும் வாசிக்கப்பட்ட அபூர்வமான இவ்விசையின் அதிர்வு அனைவரையும் பரவசப்படுத்தியது. எல்லா மூர்த்திகளுக்கும் மணியடித்து, கற்பூர தீபாராதனை காண்பித்து, வேத கோஷம் முழங்க வழிபாடு நடந்தது.
வழி வழியாக வந்த கர்நாடக சங்கீதமானது பொழுது போக்குக்கு மட்டுமல்லாது, நெறி தவறாது வாழ்ந்து பக்தி மார்க்கத்தில் சென்று நம்மை உய்வித்து உயர்நிலை அடையச் செய்வது என்பதையும், இவற்றின் மூலமே இறைவனையடைந்த அடியார்களின் பெருமையைக் கூறும் 'தேரோட்டம்' என இதைக் கருதலாம்.
-- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்