ஏப் 16, 2026

சுபசித்தி விநாயகர் ஆலயத்தில் பஞ்சாங்க படலம்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தலைநகர் டில்லி மயூர்விகார் சுபசித்தி விநாயகர் ஆலயத்தில் வேத வித்தகர் ஸ்ரீ ராம் வாத்யார் பஞ்சாங்கம் படித்தலை செவ்வாய்க்கிழமை நடத்தி வைத்தார். முன்னதாக கணபதி பூஜை வேத கோஷங்கள் முடிந்த பின் பிறக்கும் பராபவ ஆண்டு மங்களகரமாக எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக பிறக்கவும் உலகில் போர் சண்டை சச்சரவு இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் இறைவனை வேண்டிக்கொண்டு இந்த வருட பலன்களை வாசித்து விளக்கமளித்தார்.
பஞ்சாங்கம் என்பது இந்து நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களைக் குறிக்கும் ஒரு சொல். இது வானியல் நிகழ்வுகள் மற்றும் ஜோதிடக் கணிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை அடங்கும். பஞ்சாங்கம் என்ற சொல், பஞ்ச் (ஐந்து) + அங்கம் (உறுப்புகள்) என்ற சமஸ்கிருத வார்த்தைகளின் சங்கமமாகும்.
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது
அம்பாள் லலிதா சந்நிதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டின் பஞ்சாங்கத்துக்கு வேதியா்கள் சிறப்பு பூஜைகள் செய்து, நிகழாண்டில் பருமழை சற்று தாமதமாக பெய்தாலும் கால்நடைகள் சுபிட்சமாக இருக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும் என பஞ்சாங்கப் பலன்களை வாசித்தனா்.
பின்னா், பாரம்பரிய முறைப்படி பக்தா்களுக்கு புத்தாண்டின் பஞ்சாங்கம் மற்றும் கோவில் வெளியிட்ட தமிழ் வருட அட்டவணை ஆகியவை பிரசாதங்களுடன் விநியோகிக்கப்பட்டன.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
