செப் 08, 2026

லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம்
தலைநகர் டில்லியின் விகாஸ்புரி 'சி' பிளாக்கில் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ தேவி மூகாம்பிகை ஆலயத்தில், ஞாயிற்றுக் கிழமை (செப்- 6) அன்று லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் மகா அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. ஏற்பாடுகளை விகாஸ்புரி பிரார்த்தனா குழுவினர் நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
காலை பாடசாலை வித்யார்த்திகள் மற்றும் ரித்விக்குகள் பலர் ஒன்றிணைந்து, உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நல்வாழ்விற்காகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்தை முறைப்படி தொடங்கினர். அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், அர்ச்சனை, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதீ நடைபெற்றன.
பின்னர், கலச புனித நீரைக் கொண்டு ஆலயத்தில் எழுந்தருளியுள்ள உபசன்னதி தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களுடன் சிறப்பு மகா அபிஷேகம் ஏககாலத்தில் நடைபெற்றது. கல்யாண கணபதி, ஆதி சங்கரர், மூலவர் தேவி மூகாம்பிகை, சுப்பிரமணியர், அனுமன் மற்றும் வீரபத்ரர் அபிஷேகத்தைத் தொடர்ந்து, அனைத்து விக்கிரகங்களுக்கும் வண்ணமயமான நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் (மகா அலங்காரம்) செய்யப்பட்டன.
தொடர்ந்து முருகப் பெருமானின் அருள் வேண்டி, பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சக்திவாய்ந்த 'குமாரஸ்தவம்' பக்திப்பரவசத்துடன் வாசிக்கப்பட்டது. மேலும், சுப்பிரமணிய சுவாமிக்கு அஷ்டோத்திர சதநாமாவளி (108 போற்றிகள்) அர்ச்சனையும் விமரிசையாக நடைபெற்றது. லலிதா சகஸ்ரநாம பாராயணமும் மகா தீபாராதனையும் இதன் தொடர்ச்சியாக, உலகை ரசிக்கும் அகிலாண்டேஸ்வரியான தேவி மூகாம்பிகையின் அருள் பெற, பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளாக அமர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணத்தை மனமுருகப் பாடினர்.
வழிபாட்டின் உச்சக்கட்டமாக, சர்வ ஆபரண பூஷிதமாய், நவரத்தின மலர் அலங்காரத்தில் அன்னை ஸ்ரீதேவி மூகாம்பிகை பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க அன்னைக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விகாஸ்புரி பிரார்த்தனா குழுவினரின் ஏற்பாட்டில், இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் துல்லியமாக, தொய்வின்றித் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
