/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
காருண்ய மகா கணபதி கோவிலில் விளக்கு பூஜை
/
காருண்ய மகா கணபதி கோவிலில் விளக்கு பூஜை
ஜூலை 20, 2025

ஆடிமாதம் என்றால் அம்பிகையை கொண்டாடி மகளிர் மகிழ்வது வழக்கமான ஒன்று.இந்த ஆடி முதல் வெள்ளி மாலை தலைநகர் மயூர்விகார் காருண்ய மகா கணபதி கோவிலில் லட்சுமி பூஜையும் விளக்கு பூஜையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மகளிர் பெருமளவில் கலந்து கொண்டனர். அவரவர் தாங்கள் கொண்டு வந்த குத்துவிளக்கை அலங்கரித்து வரிசையாக அமர்ந்து அர்ச்சனை செய்தது பார்க்க வேண்டிய தொன்று. பூஜை நிறைவில் அவரவர் தத்தம் விளக்குகளுக்கு தீபாராதனை காட்டினர். அர்ச்சனை மலர்களை மகா விளக்கின் பாதத்தில் சேர்ப்பித்தனர். அனைவருக்கும் பிரசாதம், தாம்பூலம் வழங்கப்பட்டது
வாராவாரம் வரும் வெள்ளிக்கிழமை எப்பவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது அதிலும் ஆடி வெள்ளிக்கு இந்து சமய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு விசேஷமானது நமக்கு கேட்டதை நினைத்ததை எல்லாம் கொடுக்கும் சிறப்பு பெற்ற நாள் ஆடி வெள்ளி.
அன்னையை நாம் நம்மைப் போலவே பார்க்கிறோம். தாயாய் மகளாய் உற்ற துணையாக அவளை போற்றுகிறோம். அவளை கொண்டாட ஆடி வெள்ளி சிறப்பான நாளாக வருகிறது
வீட்டில் உள்ள பெண்கள் சேர்ந்து விளக்கு பூஜை செய்வதுண்டு. இப்போது கோவில்களில் பலரும் கூடி விளக்கு வழிபாடு செய்வதை பார்க்கிறோம். அப்படி செய்தால் மூன்று தேவியருடன் சேர்ந்து மும்மூர்த்திகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களை ஆராதனை செய்து பலன் கிடைக்கும்.
இரண்டாவது வெள்ளியில் அன்னையை மக்கள் கெளரியாக பாவித்து வழிபாடு செய்யப்படுகிறது. அன்னை கெளரியாக விரதம் இருந்து சிவனை அடைந்ததை பின்னணியாக கொண்டு பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். அன்னையின் திருவுருவப்படத்திற்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி சிவப்பு நிற பூக்களால் அர்ச்சிப்பது சிறப்பு.
அடுத்து வரும் வெள்ளியில் மாவிளக்கு ஏற்றுதல் , சித்ரா அன்ன படையல் என்று ஊருக்கு ஊர் மாறுபடும். எல்லா வெள்ளியிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து அவர்களை அன்னையாய் பாவித்து ஆசி பெறுவதையும் பார்க்கிறோம்.
-- நமது செய்தியாளர் மீனா வெங்கி