/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
மயூர்விகார் தமிழர் நலக்கழகத்தில் பொங்கல் விழா
/
மயூர்விகார் தமிழர் நலக்கழகத்தில் பொங்கல் விழா
பிப் 04, 2025

தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர். அவற்றில் மிகவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள் ஆகும். இப்பண்டிகை தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாகக் காணப்படுகின்றது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர்.
தாய் மண்ணை விட்டு வெகுதூரம் வந்தாலும் தமிழன் தனது வேர்களை விட்டுவிடுவதில்லை. எங்கு சென்றாலும் பாரம்பரிய உணவையும் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழ்கிறான். அவ்வகையில் மயூர்விகார்..3 தமிழர் நலக்கழகம் 29 ம் வருட பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
இறைவணக்கத்திற்குப்பிறகு தமிழ் கலாச்சாரப்படி 8.30மணிக்கு மகளிர் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு பூஜை செய்து பொங்கல் படைத்தார்கள். 10 மணியளவில் கோலப் போட்டி துவங்கியது. 10.10மணி முதல் 12.30மணிவரை விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மதியம் எச். ராஜா (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காரைக்குடி) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் விருந்தளிக்கப்பட்டது. மாலை 4மணிமுதல் பாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் நடனப்போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கழக மாணவமணிகள் மகளிர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தி.பாஸ்கரன் (பொதுச் செயலாளர்) வரவேற்புரையும், கா. சிங்கத்துரை (தலைவர்) தலைமை உரையும் ஆற்றினர். சிறப்பு விருந்தினர்களாக இரா. முகுந்தன் (பொதுச் செயலாளர், தில்லி தமிழ் சங்கம்), கே.வி.கே. பெருமாள் (நிறுவனர் தலைவர் தில்லி கம்பன் கழகம்), ராம் சங்கர் (வழக்கறிஞர் உச்ச நீதி மன்றம்), மீனா வெங்கி (பத்திரிக்கையாளர்), ரகுநாத் (வழக்கறிஞர் உச்ச நீதி மன்றம்), ராஜீவ் வர்மா (முன்னாள் கவுன்சிலர் கோண்ட்லி), குமார், (செயலாளர், தில்லி கலை இலக்கியப் பேரவை) ஆகியோர் சிறப்புரை ஆற்றி, தமிழ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவமணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கழகத்தின் சார்பில் நடைபெறும் தமிழ் வகுப்பு ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சிகளை விஜயலெட்சுமி மிக அழகாக தொகுத்து வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை துணைத் தலைவர் கலியபெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செவ்வனே செய்திருந்தனர். நா. சுப்பிரமணியன், பொருளாளர் நன்றி கூற இரவு விருந்துடன் விழா இனிதே முடிவுற்றது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி