ஜன 26, 2026

பாரத தேசத்தில் குறிப்பாக பக்தி இயக்க காலம் தொடங்கி இன்றைய நாகரிக காலம் வரை நம்முடைய இந்து சமயத்தில் பல்வேறு மாற்றங்களைக் காண முடிகிறது. இதற்கு அன்றைய காலகட்ட ஆட்சியாளர்களின் சூழ்நிலை, மனிதனின் எண்ணங்கள், கால சூழ்நிலை காரணங்களாக அமைந்தன.
சமயத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து பக்திநெறியை வளர்ப்பதற்குத்தான் நடைபெற்றன. அந்த வகையில் 'ஸ்ரீ ராதா கல்யாணம்' என்ற வைபவம் தொன்று தொட்டு நடைபெறும் ஒரு கலாச்சார நிகழ்ச்சி. ராதா கல்யாணம் என்பது இறைவனின் திருமண சடங்கு போன்று இல்லாமல், ஜீவாத்மா - பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்தும் வண்ணம் உள்ளது. தென்னிந்தியாவிலும் தமிழர்கள் வாழும் நகரங்களிலும் பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி நாமசங்கீர்த்தனத்துடன் பழமை மாறாமல் வைதீக முறைப்படி இன்று வரை ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவம் பல வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தெய்வங்களின் திருமண வைபவத்தை பக்தியுடன் நடத்தி அவன் அருள் வேண்டுதலை நாம் பார்க்கிறோம்
கிழக்கு தில்லி மயூர் விகார் சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் சனி ஞாயிறு( 24/25 ஜனவரி) இரு தினங்களாக ராதா கல்யாணம் மகோத்சவம் நடைபெற்றது.
பிரம்ம ஸ்ரீ சங்கர் பாகவதர் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.
முதல் நாள் சனிக்கிழமை காலை கணபதி ஹோமம் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.மாலையில் தோடயமங்களம்,குருகீர்த்தனைகள், பூஜை மற்றும் டோலோட்சவம் நடைபெற்றது.
ஞாயிறு காலை பஜனை பந்ததியில் ராதா கல்யாணம். சீர்வரிசைகள் மங்கையர்கள் எடுத்துவர முத்துக்குத்தல், காப்புகட்டல், மாலை மாற்றுதல் , திருமாங்கல்ய தாரணம், பூச்செண்டாடல் என நமது பாரம்பரிய திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்தேறியது. அவரவர் தமது திருமண நிகழ்வை நிச்சயமாக நினைவு கூர்ந்திருப்பர். இப்படி தெய்வத்திருமணத்தை நடத்தி தங்கள் இல்லங்களில் மங்கல நிகழ்வு நடைபெற வேண்டிக்கொள்கிறார்கள். மக்கள் பெருமளவு கலந்து கொண்டு கல்யாண சாப்பாட்டை உண்டு மகிழ்வுடன் இல்லம் திரும்பினர்.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி
