/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ரோகிணி நிருத்ய வாட்டிகா அகாதமியின் ஆண்டு விழா
/
ரோகிணி நிருத்ய வாட்டிகா அகாதமியின் ஆண்டு விழா
நவ 25, 2024

தில்லி ரோஹிணியில் இயங்கி வரும் நிருத்ய வாட்டிகா பாரம்பரிய நடனப் பள்ளியின் ஆண்டு விழா, பால்ஸ்ரீ திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளையின் ஆதரவுடன் மண்டி ஹவுசில் அமைந்துள்ள எல்டிஜி கலையரங்கில் நடைபெற்றது. முதன்மை மற்றும் கௌரவ விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினர்.
விழாவில் குரு ஹர்ப்ரீத் கவுரின் மாணவியர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்களைக் கண்முன் நிறுத்துவது போல மாணவியர் நிகழ்த்திய நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விழாவில் குமாரி நடாஷா ரோஹில்லா, சிருஷ்டி சிங்கால், பாகி பந்த் ஆகியோருக்கு நிருத்ய வாட்டிகா அகாதமியின் 2024 வருடத்திற்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவினை சிறப்பு விருந்தினர்களாக இரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் பூமா, தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள், சங்கீத் நாடக அகாதமியின் துணைச் செயலாளர் முனைவர் கவுசிக், லேகா சர்மா, கதக் நடன அகாதமி, ரஜினி டோக்ரா, நடன ஆசிரியர், பால் பாரதி பொதுப் பள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுகளை வழங்கிப் பேசிய பூமா, 'குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்குக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அதன்மூலம் குழந்தைகளைக் கவனச் சிதறல்களிருந்து மடை மாற்றம் செய்ய முடியும்' என்றார். மேலும், திருவள்ளுவரையும், பாரதியாரையும் மேற்கோள்காட்டிப் பேசினார்.
விருது பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பேசிய கே. வி. கே. பெருமாள், ' பல்வேறு மொழிகள் பேசும் மாணவியர் பரதநாட்டியம் கற்றுக் கொண்டு சாதனை படைப்பது பாராட்டுதலுக்குரியது. தொழில் நுட்பத்தின் மூலமாக உலகம் சுருங்கி விட்டது உண்மைதான். தொழில் நுட்பம் நகரங்களையுயம் நாடுகளையும் இணைக்கலாம். ஆனால், மனித மனங்களை இணைப்பதற்குக் கலைகளால் மட்டும்தான் முடியும். எனவே, பரதநாட்டியம் போன்ற கலைகளையும், கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும்' என்றார்.
குஷி மகாஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை 'நிருத்ய வாட்டிகா பாரம்பரிய நடனப் பள்ளி' யின் நிறுவனர் ஜீத் சிங் மற்றும் 'பால்ஸ்ரீ திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை' நிறுவனர் எம்.வி.தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
_ நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்