செப் 21, 2026

சமிஷ்டி சந்தியா வந்தனம்
டில்லி வேத கோஷம் மாணவர்களுக்கு, பேஜாவர் மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ விஷ்வப்ரஸன்ன தீர்த்த சுவாமிகளைச் சந்திக்கும் அரிய பாக்கியமும் ஆசியும் கிடைத்தது. வேதா கோஷத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் சுவாமிகள் ஆர்வமாக இருந்தார்.
மடாதிபதியைச் சந்திப்பதற்கு முன்பாக, எங்கள் மாணவர்கள் மடத்தின் வளாகத்திலேயே மாலை சமஷ்டி சந்தியா வந்தனத்தை செய்தனர். பின்னர் சுவாமிகளின் விசாரிப்பிற்கு ஏற்ப, எங்கள் அனைத்து செயல்பாடுகளையும் அவருக்கு விளக்கினர். நமது முயற்சியைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.எங்கள் மாணவர் ஒருவர் கையில் வைத்திருந்த புதிய சந்தியாவந்தனப் புத்தகத்தைக் கவனித்த சுவாமிகள், அவராகவே அதை வாங்கிப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து வியந்தார்.
மாணவர்கள் மடத்தின் வளாகத்திலேயே சந்தியாவந்தனம் செய்ததைக் கண்டு பேரானந்தம் அடைந்த சுவாமிகள், ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு வஸ்திரம், அக்ஷதை, உடுப்பி கிருஷ்ணர் மற்றும் அயோத்தி ஸ்ரீ ராமர் படங்கள் வழங்கி கௌரவித்தார். மேலும், பிரசாதம் சாப்பிட்ட பிறகே அனைவரையும் புறப்பட அனுமதித்தார். சுவாமிகளிடமிருந்து எங்கள் மாணவர்களுக்கு வரவேற்பும் மரியாதையும் கிடைத்தது.
சமீபகாலமாக, 4 மடாதிபதிகள் வேத கோஷம் மாணவர்களுடன் நெருக்கமாக உரையாடி, பண்டைய அனுஷ்டான தர்மத்தை மீட்கும் எங்கள் பணிகளைக் கேட்டறிந்து, சனாதன தர்மத்திற்காக நாங்கள் செய்து வரும் சேவைகளைப் பாராட்டி வருகிறார்கள்.
இதுவரை மயூர் விஹார் (ஃபேஸ் 1 & 2), துவாரகா ராமர் கோவில், நொய்டா சங்கர மடம், அருணா ஆசப் அலி சாலை காமாட்சி அம்மன் கோவில், விகாஸ்புரி மூகாம்பிகை கோவில், வசுந்தரா என்கிளேவ் சங்கடஹர கணபதி கோவில் மற்றும் நொய்டா கணேஷ் கார்த்திகேயா கோவில் ஆகிய முக்கிய இடங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
