கோயிலில் மழலைச் செல்வங்கள் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்
கோயிலில் மழலைச் செல்வங்கள் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்
நவ 04, 2026

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நொய்டா செக்டர் 62-ல் அமைந்துள்ள கிட்ஸீ (Kidzee) பள்ளியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மழலைச் செல்வங்கள், நொய்டா செக்டர் 62-ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் கார்த்திகேயா திருக்கோயிலுக்கு வருகை தந்தனர்.
3 முதல் 4 வயதுக்குட்பட்ட இக்குழந்தைகள் தங்களின் ஆசிரியர்களுடன் கோவிலுக்கு வந்திருந்தனர். கோயில் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் குழந்தைகளை அன்புடன் வரவேற்று, கோவிலின் பல்வேறு சன்னதிகளுக்கும் அழைத்துச் சென்று இறைவழிபாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும், இளைய தலைமுறையினரிடையே கோயில்களுக்குச் செல்வதிலும், ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் குறைந்து வருவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில் நமது தொன்மையான சனாதன தர்மத்தின் பெருமையையும், பண்பாடு மற்றும் ஆன்மீக மரபுகள் முக்கியத்துவத்தையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான பொறுப்பு உள்ளது.
அந்த வகையில், சிறு வயதிலேயே குழந்தைகளிடையே இறைபக்தியும், ஆன்மிக ஈடுபாட்டையும் வளர்க்கும் நோக்கில் அமைந்த இந்நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் வருகை தந்த அனைத்து குழந்தைகளுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் உற்சாகத்துடன் ஸ்லோகங்கள் பாராயணம் செய்ததுடன், ஒருமித்த குரலில் “ஜெய் ஸ்ரீ ராம்!” என்று பக்திப் பரவசத்துடன் முழங்கினர்.
மழலைகளின் இந்த இனிய ஆன்மீக அனுபவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நமது பாரம்பரியமும், பண்பாடும், சனாதன தர்மத்தின் உயரிய நெறிகளும் அடுத்த தலைமுறையினரிடம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
