நவ 05, 2026

'ஒரே பாரதம் உன்னத பாரதம்' (Ek Bharat Shreshtha Bharat) திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களின் மாநிலத் தோற்ற நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
தெலுங்கானா மாநில ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற கலைஞர்கள் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக, ஆளுநர் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியைப் பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில், தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.கே. போஸ், துணைத் தலைவர் பி. தர்மசீலன், பொதுச் செயலாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் இணைந்து ஆளுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், தெலுங்கானா தமிழ்ச் சங்க உறுப்பினரும் நூலாசிரியருமான ஜே. மரியா சாந்தி எழுதிய “The Core Effective of Leadership” என்ற நூலையும் வழங்கினர்.
இவ்விழாவிற்கான கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை CLIC அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ச் சங்கங்கள் மற்றும் மாநில அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
பல்வேறு மாநிலங்களின் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஒரே மேடையில் கொண்டாடி, தேசிய ஒருமைப்பாட்டையும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தும் இந்நிகழ்வில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய லோக் பவன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியக் கலைகளைத் தெலுங்கானாவில் தொடர்ந்து வளர்த்தெடுப்பதுடன், அனைத்து மொழி மற்றும் கலாச்சார மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதில் சங்கம் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்தது.
- நமது செய்தியாளர் Meena Venki
