/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ஜூலை 08, 2025

புது தில்லி வட மேற்கு பகுதியில் உள்ள கேசவ்புரத்தில் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஆனால் அழகான கோவில் மற்றும் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் புது தில்லியில் உள்ள முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது
இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விழா ஜூலை 7ம்தேதி காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை 8.45_10:30 மணிக்கு, கிருஷ்ண பக்ஷ துவாதசி திதியும், அனுராதா நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப தினத்தில், கும்பகோணம் வாத்தியார் சேனாபதி தலைமையில் (குழுவினருடன்) சுவாமிநாதன் சாஸ்திரிகள், ஸ்ரீவித்யா உபாசகர் எஸ். கே. மூர்த்தி, வேத விற்பன்னர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து தீபாராதனையும், மகா அபிஷேகமும் நடைபெற்றன. இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மூலவர் ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதிக்கு வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேகம் சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும் ஆஸ்திக சமாஜம் அமைப்பின் தலைவர் டி.என்.சிவராமகிருஷ்ணன் தனது நன்றியை தெரிவித்தார்.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் என்பது கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு புனித சடங்கு. இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், அதாவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும். கோயிலைப் புதுப்பித்தல், தெய்வ மூர்த்திகளுக்கு புத்துயிர் அளித்தல் போன்ற காரணங்களுக்காக கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. யாகசாலை அமைத்து, மந்திரங்கள் ஓதி, புனித தீர்த்தத்தை கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்