
கோகுலாஷ்டமியை முன்னிட்டு, ஸ்ரீ சுப சித்தி விநாயகர் கோவில், மயூர்விகாரில் ஸ்ரீ ருக்மணி கல்யாணம், மிகு விமரிசையாக நடைபெற்றது. ஏற்பாடுகளை, ஸ்ரீ சுப சித்தி விநாயகர் மந்திர் சொசைட்டி செய்திருந்தது.
காலை 8.30 மணிக்கு, ராமபத்ரன் பாகவதர் உஞ்சவிருத்தியுடன் வைபவம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மணி பாகவதர் குழுவினர் மிக சிறப்பாக வைபவத்தை நடத்தி வைத்தனர்.
பக்க பலமாக, ராதா (வயலின்) , சந்துரு (மிருதங்கம்) , ஆதித்யா (ஹார்மோனியம்) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். மற்றும் ஸ்ரீதர், அக்ஷய் மற்றும் சிவகுமார் பங்கேற்று குரல் ஆதரவு தந்தனர்.
தொடர்ந்து, கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு மந்திர அர்ச்சனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்ரீ ருக்மிணி கல்யாண வைபவம், அறுசுவை உணவுடன் நிறைவு பெற்றது.
முன்னோடி நிகழ்வுகள்
ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவி, மேலும் துவாபரத்தில் விஷ்ணுவின் அவதாரத்தை ஆதரிக்கும் லட்சுமி தேவியின் 'அவதாரமாக' கருதப்படுகிறது. கல்யாணம் என்பது திருமணம் மற்றும் முக்கிய விழாவின் முந்தைய மற்றும் முன்னோடி நிகழ்வுகள் ஆகும். ருக்மிணி கல்யாணம் என்பது பாகவத புராணத்தின் தசம ஸ்கந்தத்தில் (பத்தாவது பகுதி) மையக் கதாபாத்திரமான கிருஷ்ணர் ருக்மிணியை மணக்கும் அத்தியாயமாகும்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்