
புதுடில்லி: சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி மந்திரில், ஞாயிற்றுக்கிழமை ( ஆக-17) காலை ஏகாதசி ருத்ர பாராயணம் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கி, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், லகுன்யாச ஸ்தோத்திரம், ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் ருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடத்தப்பட்டது. எஸ். கே. மூர்த்தி வாத்தியார் தலைமையில், ரித்விக்குகள் பலர் பங்கேற்று ஏகாதச ருத்ர பாராயணம் செய்தனர்.
இதையடுத்து, பூஜிக்கப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரினை எடுத்து மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதிகள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரதி மாதம் மூன்றாவது வாரம், ஞாயிற்றுக்கிழமை தோறும், ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் இக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன், புதுடில்லி.