
புதுடில்லி; துவாரகா ஸ்ரீராம் மந்திரில், ஞாயிற்றுக்கிழமை (ஆக-17) காலை பஜனை சம்பிரதாயப்படி, ஸ்ரீ ருக்மணி கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது. ஏற்பாடுகளை ஸ்ரீராம் மந்திர் செய்திருந்தது. டில்லி பால கோகுலம் குழுவினர் ராமகிருஷ்ணன் பாகவதர் மற்றும் சுனில் பாகவதர் இதனை சிறப்பாக நடத்தி வைத்தனர். என். எஸ். கிருஷ்ணன் (மிருதங்கம்) மற்றும்
ஸ்ரீ அரவிந்த் பாபு ( ஹார்மோனியம்) பக்க வாத்தியம் வாசித்தனர்.
கோவில் வளாகத்தில் தோடய மங்களம், உஞ்சவிருத்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. பிறகு பெண் வீட்டார் சீர்வரிசை எடுத்து வந்தனர். ஸ்ரீ ருக்மணி கல்யாண வைபவம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 1:30 மணியளவில் கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு மந்திர அர்ச்சனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சுமார் எழுபது பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட ஸ்ரீ ருக்மிணி கல்யாண வைபவம், அறுசுவை உணவுடன் நிறைவு பெற்றது.
ஆழ்ந்த பக்தியே காரணம்
புராணங்களில் ஒரு பிரபலமான கதையாகும். இது கிருஷ்ணரின் அன்பையும், பக்தியையும், அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. ருக்மிணி கிருஷ்ணரை மணக்க விரும்பியதன் காரணம், அவர் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியே ஆகும். கிருஷ்ணரும் ருக்மணியின் பக்தியை ஏற்று அவளை மணந்தார். இந்த திருமணம் கிருஷ்ணரின் லீலைகளில் ஒன்று. மேலும், இது கிருஷ்ண பக்தர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
திருக்கல்யாணம் செய்து கொண்ட பகவானை கண்டுகளித்து சகல நன்மைகளையும் பெறுவோம்!!!!
- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன், புதுடில்லி.
