
புதுடில்லி விகாஸ்புரி சி. பிளாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில், 4வது ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் மிகு விமரிசையாக நடைபெற்றது.
இரண்டு நாட்கள் (ஜூலை 26, 27-2025) நடைபெற்ற இந்த வைபவத்தில், ஆன்மிக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். சீதா கல்யாணத்தையொட்டி அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவில் தியானம் மற்றும் கலாச்சார மையம் செய்திருந்தது.
நிகழ்ச்சியின் முதல் நாள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, அஷ்டபதி பஜனை, அதைத் தொடர்ந்து மாலை திவ்யநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. பால கோகுலம் குழுவைச் சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் சுனில் பாகவதர் குழுவினர் இதில் பங்கேற்று நடத்தினர். என். எஸ். கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஜெயராமன் பக்க வாத்தியம் (மிருதங்கம்) வாசித்தனர்.
இரண்டாம் நாள் காலை தன்வந்திரி, சம்க்ஷேப ராமாயண ஹோமத்திற்கு பிறகு, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில், உஞ்சவிருத்தியுடன் தொடங்கியது. பிறகு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக மேளதாளத்துடன் ஊர் அழைப்பு நடந்தது. பிறகு பெண் வீட்டார் சீர்வரிசை எடுத்து வந்தனர். உஞ்ச விருத்தி வீடு வீடாக சென்று ஸ்ரீ ராமருக்கு அரிசி பருப்பு ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
சீதா கல்யாண உற்சவம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 1:30 மணியளவில் கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு மந்திர அர்ச்சனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவுற்றது. சுமார் 200 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம், அறுசுவை உணவுடன் நிறைவு பெற்றது.
சீதா கல்யாணம்
இராமாயணத்தில் வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதில், இராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெறும் காட்சி விவரிக்கப்படுகிறது. இது இந்து மதத்தில் ஒரு புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. சீதா கல்யாணம் பொதுவாக இராம நவமி போன்ற நாட்களில் கொண்டாடப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்