
இனிமையான இரட்டை சங்கீதம்
டில்லி லோதி ரோட் இந்திய பன்னாட்டு மையம், தேஷ்முக் வளாகத்தில் இரட்டை சங்கீத ( Double bill) நிகழ்ச்சியை நடத்தியது. முதலாவதாக இந்துஸ்தானி இசையாக விதூஷி ரீதா தாஸின்சரோட் வாத்திய நிகழ்வு நடைபெற்றது. இவர் சுனில் முகர்ஜி மற்றும் ஆலிஸ் தாலின் சிஷ்யர். தந்தை பிரபல பேராசிரியர் சந்திரகாந்த் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உஸ்தாத் அக்தர் ஹுசைன் தபேலா வாசித்தார்.
தொடர்ந்து அனகா மணிகண்டனின் கர்நாடக இசை நடைபெற்றது. கம்பீரவாணியில் தியாகராஜரின் ' ஸதா மதிநி கலது கதனா' விறுவிறுப்பாக பாடி தொடர்ந்து சாரங்காவின் அற்புத ஆலாபனை. அதற்கு தில்லி ஆர் ஸ்ரீதர் வயலினில் அலங்கார நாத பந்தல் .'எந்த பாக்யமு மாபாலகா நீ' ரம்யம் . பல்லவியில் ஸ்வரம் பாடி கூடுதல் அழகூட்டல் ரசிக்கும்படி இருந்தது.
அடுத்து தூரனின் முருகா என்றால் உள்ளம் உருகாதோ சாவேரியில் இதயம் தொட்டது. மீண்டும் தியாகராஜரின் சந்திர ஜோதியில் 'சசிவதனா பக்த ஜனா'. பொன்னையாபிள்ளையின் பக்தபாலனசேய ப்ருதுபா' (கீரவாணி ). பல்லவியில் ஸ்வரம் அதனை தொடர்ந்து தனி ஆவர்த்தனம். மனோகரின் கை அசைவில் நாதம் நர்த்தனம் ஆடியது.இறுதியாக' சாரமைன மாட்டலண்ட சாலு சாலு ' பேகாக்கில் சுவாதி திருநாள் வரிகளை இதமாக பாடி நிறைவு செய்தார்.வயலினில் தில்லி ஆர் ஸ்ரீதர் மிருதங்கம் தில் மனோகர் பாலசந்திரனே உடன் வாசித்து சிறப்பித்தனர்.
டில்லியில் இருந்து மீனா வெங்கி
