/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
கொல்கத்தா பாரதி தமிழ் சங்க ஆண்டு விழா
/
கொல்கத்தா பாரதி தமிழ் சங்க ஆண்டு விழா
மார் 14, 2024

கொல்கத்தா பாரதி தமிழ் சங்கத்தின் 19 வது ஆண்டு துவக்க விழா ராஷ்பிகாரி அவென்யூ கம்யூனிட்டி ஹாலில் 22/4/23 அன்று மாலை நடைபெற்றது. தமிழ் வாழ்த்து, கணபதி வந்தனம் வாணி ,ஸ்ரீராம் பாட நிகழ்ச்சிகள் தொடங்கியது. சிறப்பு விருந்தினர் விமானி ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி, பாரதியார் படத்திற்கு மலர்கள் சமர்பித்து விழாவை துவக்கி வைத்தார். பாரதி தமிழ் சங்க தலைவர் சம்பத் குமார், சித்ரா சிவராம கிருஷ்ணன், ஜெயராமன், எஸ்.கே.சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் கீதை பாராயணம்(வாணி மற்றும் ஸ்ரீராம்) கர்நாடக சங்கீதம் ( ரஞ்சித் நாத்), மிருதங்கம் (சுரேஷ்), பரதம்( பாவனா கணபதி), பக்தி இசை ( பாலகுமார் மற்றும் தேவதர்ஷன்) என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முக்கிய நிகழ்வாக மிருதங்க வாத்ய விதூஷகர் பி.வி.சாய்ராம் குழுவினரின் இசை சங்கமம் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
கலைநிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக ' ரிதமிகல் நோட்ஸ் '
பி.வி.சாய் ராம் குழுவினரின் ஜுகல்பந்தி வாத்திய கச்சேரி நடைபெற்றது. பி.வி.சாய்ராம் அவர்கள் பன்முக கலைஞர்.மிருதங்கம் கடம் கஞ்சிரா , டோலக் என் பல கருவிகளை கையாளும் திறம் பெற்றவர். வயலின் எஸ் ரங்கநாதன்,எஸ். வெங்கட்ராமன் மிருதங்கம், பி.வி.சாய்ராம் கடம், ஜி.சூர்யநாராயணன் மோர்சிங் வாசித்து சிறப்பித்தனர்.
அன்றைய முதல் கிருதி பராத்பரா பரமேஸ்வரா எனும் வாசஸ்பதி ராககீர்த்தனையை எடுத்துக் கொண்டு அனுபவித்து வாசித்தார்கள்.
பாபநாசம் சிவன் எப்படி அந்த சிவனை வர்ணித்தாரோ அதனை இசையில் நம்மை ரசிக்க வைத்தார்கள்.முக்கண்ணன் புரம் எரித்தவன் , சுப்ரமணியன் தந்தை, தேவர்கள் பூஜிக்கும் ஆதி அந்தம் இல்லாத பெரியவன் பிரம்மனும் ஹரியும் அடிமுடி காணமுடியாத பரமேஸ்வரன் என்ற வர்ணனைகளை தங்கள் வாசிப்பின் மூலம் உணரவைத்தனர்.அதே இடத்தில் நிரவல் அமைத்து அந்த சிவனை அணுஅணுவாய் ரசிக்க வைத்தது அருமை. தொடர்ந்து வந்த தனிஆவர்த்தனத்தில் வாத்யங்களின் சங்கமம் , நடை, கடத்தில் சாய்ராம் காட்டிய அற்புதங்கள் அவையோரை ரசிக்க வைத்தது.
அடுத்ததாக பாபநாசம் சிவன் வரிகளில் எல்லோரும் விரும்பி ரசிக்கும் கீர்த்தனை'என்ன தவம் செய்தனை.' எங்கும் நிறை பரப்பிரம்மமான கிருஷ்ணன் உன்னை அம்மா என்றழைக்க நீ பெருந்தவம் செய்திருக்க வேண்டும் . மேலும் ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையிலேந்தி சீராட்டி பாலுட்டி மகிழவும் பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்த அந்த நிர்மலமனதுடைய யசோதையை வர்ணித்தது இன்னமும் காதில் ரீங்கரிக்கிறது அப்படிப்பட்ட புண்ணியவதி, சனகாதியர் தவயோகம் புரிந்து சாதித்ததை,புனிதமதை எளிதில் பெற யசோதா நீ என்ன தவம் செய்தனை...
சிவனின் கற்பனை ஒருபுறம் இருக்க நம்மை கிருஷ்ணருடன் ஒன்றிட வைத்த இசை ஒருபுறம்.அன்றை மாலை அமிர்தம்...அமிர்தம்.இசை குழுவினருக்கு சபையோர் அளித்த கரகோஷம் அபாரம்.
அடுத்து ஹேமலதா விஸ்வநாதன் இனிய தமிழில் கவிதை வாசிக்க பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பி.வி.சாய்ராம் தனது பாட்டனார் எழுதிய வங்கம் வங்காளியும் புத்தகத்தை தலைவர் சம்பத் குமாருக்கு வழங்கினார். பி.வி சாய்ராம் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி