/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
வாழ நினைத்தால் வாழலாம்..: வழியா இல்லை ஊரில்! 'திக்கற்ற பெண்களின்' வாழ்க்கைக்கு உதவிய 'கூக் - யூ'
/
வாழ நினைத்தால் வாழலாம்..: வழியா இல்லை ஊரில்! 'திக்கற்ற பெண்களின்' வாழ்க்கைக்கு உதவிய 'கூக் - யூ'
வாழ நினைத்தால் வாழலாம்..: வழியா இல்லை ஊரில்! 'திக்கற்ற பெண்களின்' வாழ்க்கைக்கு உதவிய 'கூக் - யூ'
வாழ நினைத்தால் வாழலாம்..: வழியா இல்லை ஊரில்! 'திக்கற்ற பெண்களின்' வாழ்க்கைக்கு உதவிய 'கூக் - யூ'
UPDATED : பிப் 26, 2025 05:11 PM
ADDED : பிப் 23, 2025 11:21 PM

'ஒருவருக்கு மீன் கொடுத்தால், நாள் முழுதும் உணவு கொடுக்க வேண்டும். அதுவே மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால், அவர் வாழ்க்கையை, அவரே பார்த்து கொள்வார். இதன் மூலம் தன்னிறைவு வாழ்க்கையை, பல பெண்கள் குழுவினர் பெற்றனர். அதில் ஒன்று தான், நஞ்சன் கூடு பெண்கள் குழுவின் வெற்றிக்கதை.
கொரோனோ தொற்று நோய் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. சிலருக்கு, புதிய வாழ்க்கைக்கான வழிகளை திறந்தது.
உதவி
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு அருகில் உள்ள ஹதினார் கிராமத்தில், கொரோனோவால் பல குடும்பங்கள் நிலை குலைந்ததை, அப்பகுதியில் வசித்த நரம்பியல், உடலியல் நிபுணர் நந்தினியும், அவரது கணவரும் கண்கூடாக பார்த்தனர்.
இக்கிராமத்தில் பல குடும்பத்தின் ஜீவனாக இருந்தவர்கள் இறந்ததால், அக்குடும்பத்தினர் நிலை குலைந்தனர். இந்த இடங்களில் முறையான மருத்துவ வசதியோ, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை.
இவர்களுக்கு உதவி செய்ய, தம்பதி முடிவு செய்தனர். நந்தினி, தன் நண்பர்கள் வட்டம், சமூக வலைதள நெட்டிசன்கள் உதவியுடன் கிராம மக்களுக்கு உதவினர். உணவு, மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் சிலிண்டர் உட்பட பல வசதிகளை செய்து கொடுத்தனர்.
பணம், நிதி உதவி அளிப்பதால் அதை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது. அவர்கள் சுயமாக முன்னேற வழி செய்து கொடுத்தால், தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வர் என்பதை அவர் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு 'புரோட்டா கார்' என்ற யோசனை தோன்றியது.
இது குறித்து நந்தினி கூறியதாவது:
நகரின் பல்வேறு ஹோட்டல்களில் புரோட்டாக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை ஹோட்டல்களில் தயாரித்தும், ரெடிமேடாகவும் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இதை வைத்து, பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்று தோன்றியது. இயற்கை முறையில், வீட்டிலேயே தயாரித்து விற்கலாம் என்று யோசனையும் உதித்தது. இதற்காக அமைக்கப்பட்டதே 'கூக் - யூ' அமைப்பு.
நிலம் வழங்கல்
சொந்த காலில் நிற்க வேண்டும் என்றால், முதலில் அவர்களை கை துாக்கி விட வேண்டும். இதனால், நானும், என் கணவரும் பேசி, கிராமத்தில் உள்ள எங்கள் நிலத்தில் பாதி நிலத்தை, இப்பெண்களுக்கு வழங்கினோம்.
இந்த நிலத்தில் முள்ளங்கி, கேரட், உருளை கிழங்கு, வெந்தைய இலைகள் உட்பட காய்கறிகள், கோதுமையை பயிரிட்டனர்.
மழை காலத்தில் 'காலிபிளவர்' வளர்க்க முடியாது என்பதால், வெளியில் இருந்து வாங்குகின்றனர்.
பெண்கள் குழுவினர், சுகாதாரமாக தயாரித்து ஹோட்டல்களுக்கு விற்கும் புரோட்டாக்கள், அளவில் சிறிதாக இருந்தாலும், நிறைவாகவும், சுவையாகவும் இருக்கும்.
இந்த புரோட்டாக்கள், வாழை இலையில் மடித்து விற்கின்றனர். ஒவ்வொரு பொட்டலத்திலும் ஐந்து புரோட்டாக்கள் இருக்கும். இவர்களை, 'புரோட்டா கார்ட் வாரியர்ஸ்' என்று பலரும் அழைக்கின்றனர்.
இது தவிர பல வகை முறுக்கு'களும் தயாரித்து விற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுரவ வாழ்க்கை
இக்குழுவை சேர்ந்த மஹாதேவி, 30, கூறியதாவது:
கொரோனா காலத்தில், என் கணவர் இறந்த போது, நானும், எனது இரண்டு சிறிய குழந்தைகளும் தவித்தோம்.
என் வாழ்க்கை முடிந்தது என்று எண்ணினேன். அப்போது தான், 'கூக் - யூ' அமைப்பினர் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் உதவியால், கவுரவத்துடன் வாழ்கையை வாழ்கிறோம்.
தினமும் ரூ.700
எங்கள் குழுவில் 11 பெண்கள் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தினமும் 300 முதல் 350 புரோட்டாக்கள் தயாரிக்கிறோம். இதன் மூலம், தினமும் 700 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. எங்கள் வாழ்க்கை, அர்த்தமுள்ளதாக மாறி உள்ளது.
ஒவ்வொருவரும், தலா 11 பெண்களை சேர்த்து, தொழிலை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்குழுவினர் குறித்து ரோட்டரி சென்ட்ரல் மைசூரு சங்கத்திடம், டாக்டர் நந்தினி விவரித்திருந்தார். ரோட்டரி சங்கத்தினரும், புரோட்டாக்களை விற்பனை செய்ய, தள்ளு வண்டியை வாங்கி கொடுத்துள்ளனர்
- நமது நிருபர் -.

