மக்களை பேச்சால் ஈர்க்கும் ரோஜாப்பூ விற்கும் சிறுமி
மக்களை பேச்சால் ஈர்க்கும் ரோஜாப்பூ விற்கும் சிறுமி
ADDED : மே 17, 2026 11:21 PM

- நமது நிருபர் -
இன்றைய சிறுமியர் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவதுடன், சிறு வயதிலேயே ஏதாவது ஒரு வேலை செய்து, பெற்றோரின் கஷ்டத்துக்கு கை கொடுக்கின்றனர். அதேபோன்று, பெங்களூரின் பிரபலமான சாலையில் பூ விற்கும் சிறுமி, அனைவரையும் கவர்ந்துள்ளார்.
கர்நாடகாவில் நடக்கும் அனைத்து தேர்வுகளிலும், மாணவியர் கையே ஓங்கி உள்ளது. சிறுமியர் படிப்பில் சூட்டிகையாக இருப்பதுடன், குடும்ப பொறுப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
பகுதி நேர வேலை செய்து, தங்கள் படிப்புக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் சிறுமியரை, பல இடங்களில் காணலாம். காலை, மாலையில் தாய், தந்தைக்கு உதவியாக பழங்கள், காய்கறிகள், பூக்கள் விற்கின்றனர்.
சுறுசுறுப்பு குடும்ப வண்டியை இழுத்து செல்லும் பெற்றோருக்கு, கை கொடுத்து உதவும் சிறுமியர் அதிகம். பெங்களூரின், சர்ச் ஸ்ட்ரீட் மிகவும் பிரபலமான சாலையாகும். மக்கள் நெரிசல் மிகுந்த இந்த சாலையில், பூக்கள், பூங்கொத்துகள் விற்போரை பார்க்கலாம். அதே போன்று 12 வயதுள்ள சிறுமி, தினமும் மாலை, சர்ச் ஸ்ட்ரீட்டில் ரோஜாப்பூ விற்கிறார்.
அழகான இந்த சிறுமி, சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடி பூ விற்பதால், பலரும் அவரிடம் அன்பாக பேசுகின்றனர். இவரை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், நான்கைந்து பேர் சிறுமியிடம் ரோஜாப்பூக்கள் வாங்கினர். அவர்களில் ஒரு இளைஞர், தான் வாங்கிய ரோஜாக்களில், ஒரு பூவை சிறுமிக்கு அன்பளிப்பாக கொடுத்தார். ஆனால் அந்த பூவை சிறுமி வாங்க மறுத்தார்.
'உங்களிடம் இலவசமாக பூவை பெற்றுக்கொண்டால், அது பிச்சையாகிவிடும். நான் பிச்சை எடுக்கவில்லை. பூ வியாபாரம் செய்கிறேன். என் வீட்டில் நிறைய பூக்கள் உள்ளன. நீங்கள் இந்த பூவை, உங்கள் தாய்க்கு கொடுங்கள்' என்றார்.
சாதுர்யம் சிறுமியின் பேச்சை கேட்டு, ஆச்சரியமடைந்த இளைஞர், 'என் தாய்க்கு ரோஜாப்பூ பிடிக்காது. எனவே என் தோழிக்கு தரட்டுமா' என கேட்டார்.
இதற்கு சிறுமி, 'உங்கள் தோழியும் பெண்தானே. அவரும் தாய்தான் என்பதால், நீங்கள் உங்கள் தோழிக்கு இந்த ரோஜாவை தரலாம்' என்றார். சிறுமியின் பேச்சை கேட்டு, இளைஞர்களும், அங்கிருந்தவர்களும் அதிசயித்தனர்.
சிறுமியை பற்றி விசாரித்த போது, 'நான் தினமும் மாலை இங்கு பூ விற்க வருகிறேன். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை. மே 29ல் பள்ளி ஆரம்பமாகும். பள்ளி நாட்களிலும் மாலையில் இங்கு வருவேன்' என கூறினார். அவரது பெயர், முகவரி எதையும் அவர் குறிப்பிடவில்லை.
