நர்சரி தொழிலில் சாதித்த குடும்ப தலைவி முதுகெலும்பாக உதவும் கணவர்
நர்சரி தொழிலில் சாதித்த குடும்ப தலைவி முதுகெலும்பாக உதவும் கணவர்
ADDED : பிப் 09, 2026 05:13 AM

- நமது நிருபர் -
வாழ்க்கை நடத்துவதற்கு பல வழிகள் உள்ளன. பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்து கின்றனர்.
குறிப்பாக பெண்கள் வீட்டில் இருந்தபடி ஊறுகாய், அப்பளம், மசாலா பொருட்கள் உட்பட பல விதமான சமையல் பொருட்களை தயாரித்து விற்று, குடும்பத்தை காப்பாற்றுகின்றனர்.
சமீப ஆண்டுகளாக பெண்கள், தொழிலதிபர்களாகி சாதனை படைக்கின்றனர்.
இவர்களின் வரிசையில் பவ்யா ஷெட்டியும் சேர்ந்துள்ளார். தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின் கோடிம்பாடி கிராமத்தை சேர்ந்த வித்யா பிரசாத்தின் மனைவி பவ்யா ஷெட்டி.
இவர் செடிகள் வளர்க்கும் நர்சரி தொழிலதிபராக இருக்கிறார்.
சுயதொழில் இதற்கு முன் கொடிம்பாடி பால் கூட்டுறவு சங்கத்தில் பவ்யாவும், இவரது கணவரும் நர்சரியில் பணியாற்றினர். இதில் கிடைத்த வருவாய், குடும்பத்தை நிர்வகிக்க போதுமானதாக இல்லை. எனவே பவ்யாவுக்கு சுய தொழில் துவங்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.
பால் கூட்டுறவு சங்கத்தில் வேலையை விட்டு விட்டு, சுய தொழிலில் ஈடுபட்டார். முதலில் 50,000 ரூபாய் முதலீடு செய்து, நர்சரி தொழிலை துவக்கினார். அதன்பின் கூட்டுறவு சங்கத்தில், 1.50 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தொழிலை விரிவுபடுத்தினார்.
இவரது கணவர் வித்யாபிரசாத், நர்சரியில் பணியாற்றியதால், இந்த அனுபவம் மனைவிக்கு உதவியது. இந்த தொழிலில் முன்னேற வாய்ப்புள்ளது என்பது தெரிந்தவுடன், வித்யாஸ்ரீக்கு சுய உதவிக்குழுவில் 20 லட்சம் ரூபாய் கடன் கிடைத்தது.
இதில் நர்சரியை மேலும் பெரிதாக்க திட்டமிட்டார். ஆனால் இவர்களிடம் அவ்வளவு இடம் இல்லை. எனவே கெதிலா கிராமத்தில் இடத்தை குத்தகைக்கு பெற்று, நர்சரி அமைத்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நர்சரி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
லட்சங்கள் ஒரு காலத்தில் குடும்பம் நடத்தவே, பணம் போதாமல் பரிதவித்த பவ்யாவின் குடும்பத்தினர், இப்போது லட்சங்களில் சம்பாதிக்கின்றனர். இவர்களின் நர்சரியில் பல்வேறு செடிகள் உள்ளன. வெவ்வேறு விதமான மரக்கன்றுகள, பாக்கு கன்றுகள், பூச்செடிகள் உள்ளன. தொழில் லாபகரமாக நடக்கிறது. வில்வம், மிளகு, தென்னை, எலுமிச்சை என, இங்கு கிடைக்காத செடிகளே இல்லை.
கர்நாடகாவின் பல மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட பல இடங்களில் இருந்தும், பவ்யாவின் நர்சரிக்கு வந்து லாரிகளில் செடிகள், மரக்கன்றுகள் வாங்கி செல்கின்றனர். விவசாயிகளும் இவர்களிடம் தேவையான மரக்கன்றுகள் வாங்குகின்றனர். குன்று ஒன்றில் படிகளை போன்று செதுக்கி, அங்கு பூச்செடிகள் வளர்க்கிறார்.
மனைவியின் முதுகெலும்பாக கணவர் வித்யாபிரசாத் நிற்கிறார். இத்தம்பதி மகள் ரக்ஷிதா, பட்டப்படிப்பு படிக்கிறார். மகன் ஜீவித் பள்ளியில் படிக்கிறார். இவர்களும் கூட பெற்றோருக்கு உதவியாக உள்ளனர். எட்டு பேர் கொண்ட இவர்களின் குடும்பம், நர்சரியால் செழிப்பாக வாழ்கிறது. குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சரியான திட்டமிடல் இருந்தால், வறுமையை விரட்டியடிக்க முடியும் என்பதற்கு பவ்யா சிறந்த எடுத்துக்காட்டு.
