குடும்பத்தின் முதுகெலும்பாக மாறி விட்ட 'ஆட்டோ' மானசா!
குடும்பத்தின் முதுகெலும்பாக மாறி விட்ட 'ஆட்டோ' மானசா!
ADDED : மே 24, 2026 11:19 PM

- நமது நிருபர் -: பெண் என்றால் சமைப்பது: சிக்கமகளூரு நகரின், அம்பளே கிராமத்தில் வசிப்பவர் மானசா, 22. இவர் பெற்றோருக்கு நான்காவது மகளாவார். இவரது தந்தை குமார் ஆட்டோ ஓட்டி, தன் மனைவி, மகள்களை காப்பாற்றினார். தனக்கு கிடைக்கும் வருவாயில், குடும்பத்தை நிர்வகித்தார். மகள்களை படிக்க வைத்தார். தங்களுக்காக தந்தை படும் கஷ்டத்தை, அருகில் இருந்து பார்த்த மானசா, மனம் வருந்தினார்.
அது மட்டுமின்றி, தன் அக்காக்களுக்கு திருமணம் செய்ய, பணம் புரட்ட இரவு, பகலாக தந்தை ஆட்டோ ஓட்டுவதை கவனித்தார். குடும்பத்தை காப்பாற்ற, தனித்து போராடும் தந்தைக்கு தோள் கொடுக்க, மானசா முடிவு செய்தார்.
படிப்பை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுவது என முடிவு செய்தார். இவருக்கு தந்தையே குருவாக இருந்தார். குறுகிய காலத்தில் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார்.
ஆரம்பத்தில் தன் தந்தையின் ஆட்டோவையே இவரும் ஓட்டினார். மகளின் ஆர்வம் மற்றும் குடும்ப பொறுப்பை கண்டு, மனம் நெகிழ்ந்த தந்தை, மகளுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்தார். வயதான காலத்தில் மகள் தனக்கு பக்கபலமாக இருப்பதை, தந்தை பெருமையாக கருதுகிறார்.
தற்போது மானசா, சிக்கமகளூரு மக்களுக்கு, 'ஆட்டோ மானசா' என்றே, அறிமுகமாகியுள்ளார். தன் தந்தையின் ஆட்டோ ஸ்டாண்டிலேயே மகள் நிற்கிறார். தன் ஆட்டோவில் ஏறும் பயணியரை, பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடத்தில் சேர்க்கிறார். தினமும், 800 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
இதில் தனக்காக அழகு சாதனங்கள், உடைகள் என, எதையும் வாங்குவது இல்லை. சம்பாதித்தியத்தை பெற்றோரிடம் கொடுக்கிறார். ஆண் பிள்ளைகள் மட்டுமே, குடும்பத்தை காப்பாற்றுவர் என்ற எண்ணத்தை, மானசா அடித்து நொறுக்கியுள்ளார். எந்த துறையிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை, உணர்த்தியுள்ளார்.
மானசா கூறியதாவது:
எங்களுக்காக தந்தை ஒருவரே கஷ்டப்படுவதை பார்க்க என்னால் முடியவில்லை. அவருக்கு துணையாக நிற்க வேண்டும் என, முடிவு செய்தேன். எப்போதும் என் தந்தையுடன், ஆட்டோவில் பயணித்ததால், எனக்கும் அதில் விருப்பம் ஏற்பட்டது. 14 வயதிலேயே ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டேன். படிப்பை நிறுத்தி, இதே தொழிலில் ஈடுபட்டுள்ளேன்.
எனக்கு தந்தையே சொந்த ஆட்டோ வாங்கி கொடுத்தார். ஆண் ஆதிக்கம் நிறைந்த ஓட்டுநர் தொழிலில், ஒரு கிராமத்து பெண்ணும் ஈடுபடுவதை கண்டு, ஆரம்பத்தில் சிலர் கிண்டலாக பேசினர். ஆனால், இப்போது அதே மக்கள், என்னை கண்டு ஆச்சர்யமடைகின்றனர்.
சில ஆண்டுகளாக நான் ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு இந்த வேலை செய்வது, நிம்மதியாக, திருப்தியாக உள்ளது. என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக நின்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மானசாவின் தந்தை குமார் கூறியதாவது:
இரண்டாம் ஆண்டு பி.யு.சி., முடித்த பின், என் மகள் மானசா படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. சிறு வயதில் இருந்தே, ஆட்டோ ஓட்ட கற்க வேண்டும் என, பிடிவாதம் பிடித்தார். நான் எங்கு சென்றாலும், என்னுடன் வருவார். அவருக்கு நானே ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்தேன்.
மூன்று மாதங்களுக்கு முன், புதிதாக ஆட்டோ வாங்கி கொடுத்தேன். டிரைவிங் லைசென்சும் வாங்கி கொடுத்தேன்.
என் நான்கு மகள்களில், மானசா கடைசி மகள். இப்போது தினமும், 1,000 ரூபாய் வரை சம்பாதித்து, என்னிடம் கொடுக்கிறார். நான் பணம் கேட்காவிட்டாலும், என்னிடமே அவர் சம்பளத்தை கொடுப்பது பெருமையாக உள்ளது. அவரது தேவைக்கான செலவுகளை, அவரே செய்து கொள்கிறார். குடும்பத்துக்கு முதுகெலும்பாக நிற்கிறார். அவரது துணை எனக்கு உதவியாக உள்ளது.
பொதுமக்கள், போலீசார் என, யாரும் அவருக்கு தொந்தரவு கொடுப்பது இல்லை. இது, மானசாவின் வாழ்க்கை கதை அல்ல; தன்னம்பிக்கையின் அடையாளம். குடும்பத்தின் மீது அவருக்கு மிகுந்த அன்புள்ளது. என் மகள் எனது பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.
