ADDED : ஏப் 13, 2026 01:14 AM

- நமது நிருபர் -
அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் சிலைகளை பார்க்கும் போது, மனிதர்களின் மனதில் ஒரு வித அமைதியும், கலைநயம் மீது வியப்பும் ஏற்படுவது வழக்கம். சிலைகளை வடிவமைப்பது, அதற்கு அழகு சேர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. பொறுமை அதிகம் தேவை. கொஞ்சம் சொதப்பினால் கூட சிலையின் அழகே பாழாகி விடும். நிலைமை இப்படி இருக்கையில், வடமாநில பெண் ஒருவர் சிலைகளுக்கு பார்த்து, பார்த்து அழகு சேர்க்கிறார்.
கர்நாடகாவின் வடமாவட்டமான தார்வாடின் ஹூப்பள்ளி கப்பூர் கிராஸ் பகுதியில், சிலைகள் வடிவமைக்கும் கூடாரம் உள்ளது. இங்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தேவகி ரத்தோட் என்பவர் சிலைகளை அழகுபடுத்தும் பணியை செய்து வருகிறார்.
இதுகுறித்து தேவகி ரத்தோட் கூறியதாவது:
ராஜஸ்தானில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு முன், வேலை தேடி கர்நாடகாவுக்கு வந்தேன். ஹூப்பள்ளிக்கு வந்ததும் உறவினர் ஒருவர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தேன். சில காரணங்களால் அங்கிருந்து வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில், வேலையும் கையில் இல்லை. கப்பூர் கிராசில் சிலை வடிவமைக்கும் பட்டறையில், உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். சிறு வயதில் இருந்தே கலை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால், பள்ளிக்கு சென்று படிக்க முடியாத சூழ்நிலை.
இங்கு வந்ததும் சிற்பிகளிடம் கேட்டு, சிலைகளை எப்படி அழகு படுத்துவது என்று கற்று கொண்டேன். நாட்கள் செல்லச்செல்ல சிலைகளுக்கு நானே வர்ணம் தீட்ட ஆரம்பித்தேன்.
நான் வர்ணம் திட்டிய சிலைகளை, வாடிக்கையாளர்கள் ஆர்வமாக வாங்கி செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். என் கணவர், பிள்ளைகள் ராஜஸ்தானில் உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ஊருக்கு செல்கிறேன். எனக்கு நிறைய கனவுகள் உள்ளன. நான் படிக்கவில்லை; என் மூன்று மகள்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இரு மகள்களுக்கு படிப்பு வரவில்லை. அவர்களுக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகள் படிக்கிறார். என்னை போன்று அவரும் கஷ்டப்படக்கூடாது. அவரை நன்கு படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்புவதே என் குறிக்கோள். கர்நாடகா எனக்கு, 2வது வீடு போன்றாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
