/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மவுசு குறையாத மைசூரு பட்டுச்சேலை; 'கியூ'வில் காத்திருக்கும் இல்லத்தரசிகள்
/
மவுசு குறையாத மைசூரு பட்டுச்சேலை; 'கியூ'வில் காத்திருக்கும் இல்லத்தரசிகள்
மவுசு குறையாத மைசூரு பட்டுச்சேலை; 'கியூ'வில் காத்திருக்கும் இல்லத்தரசிகள்
மவுசு குறையாத மைசூரு பட்டுச்சேலை; 'கியூ'வில் காத்திருக்கும் இல்லத்தரசிகள்
ADDED : ஆக 17, 2025 10:09 PM

பெண்களுக்கு பிடித்தமான உடை எது என, கேள்வி எழுப்பினால் பலரும் சேலை என பதில் அளிப்பர். குறிப்பாக பட்டுச்சேலை பிடிக்காத பெண்களே இருக்க மாட்டார்கள்.
மார்க்கெட்டில் அறிமுகமாகும் விதவிதமான சேலைகள் வாங்கி குவிப்பதில், அதிக ஆர்வம் கொண்டவர்கள். எவ்வளவு சேலைகள் இருந்தாலும், திருப்தி இருக்காது.
சேலைகளில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ், பருத்தி, சூரத், குஜராத் சேலைகள் உட்பட, பல ரகங்கள் உள்ளன.
இவற்றில் மைசூரு பட்டும் பெண்களின் பேவரிட். மைசூரு பட்டுச்சேலைகள் கர்நாடகா மட்டுமின்றி, வெளிநாடுகள், மாநிலங்களிலும் பிரசித்தி பெற்றதாகும். மைசூருக்கு வரும் பலரும் பட்டுச்சேலை வாங்க மறப்பது இல்லை.
மற்ற சேலைகளுடன் ஒப்பிட்டால், மைசூரு பட்டுச்சேலை தனிச்சிறப்பு கொண்டது. பூக்களின் இதழ்களை போன்று, மிகவும் மென்மையானது. பாரமாக இருக்காது. உடலில் உடுத்தி இருப்பதே தெரியாது.
பெண்களின் அழகை மெருகூட்டும். இதே காரணத்தால், பெண்கள் மைசூரு பட்டுச்சேலைகளை அதிகம் விரும்புகின்றனர். தசரா திருவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணியர், மைசூரு பட்டுச்சேலைகளை வாங்கி செல்கின்றனர்.
வரும் நாட்களில் விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி பண்டிகைகள் வருகின்றன. இதனால் மைசூரு பட்டுச்சேலைகள் விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னபட்டணாவில் உள்ள, அரசு சார்ந்த மைசூரு பட்டுச்சேலைகள் விற்பனை கடைகளில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
சென்னபட்டணாவில் உள்ள, மைசூரு பட்டுச்சேலைகள் கடையில், சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு, மாண்டியா, துமகூரு நகரங்களில் இருந்து பெண்கள் வந்து வாங்குகின்றனர்.
பொதுவாக சனிக் கிழமைகளில் புதிய கலெக்ஷன் சேலைகள் வருவது வழக்கம். தாமதமானால் புதிய டிசைன் சேலைகள் கிடைக்காமல் போகும் என்ற எண்ணத்தில் காலையில் கடை திறக்கு முன், வரிசையில் அமர்கின்றனர். கடை திறந்தவுடன், போட்டி போட்டுக்கொண்டு சேலை வாங்குகின்றனர்.
மைசூரு சேலைக்கு மவுசு இருந்தாலும், விலை குறையவில்லை. சுத்தமான பட்டால் தயாரிக்கப்பட்ட, சிறிய பார்டர்கள் கொண்ட சேலைகளின் விலை, 20,000 முதல் 30,000 ரூபாய் வரை உள்ளது.
புதிய டிசைன்களாக இருந்தால், 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலை உள்ளது. ஆனால் அதைப்பற்றி சிந்திக்காமல் சேலைகள் வாங்குகின்றனர்.
- நமது நிருபர் -