/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மகளிர் சங்கத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
/
மகளிர் சங்கத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
ADDED : ஆக 24, 2025 11:18 PM

தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவில் உள்ளது தீர்த்தா கிராமம். இக்கிராமத்தில் உள்ள அதிகம் படிப்பறிவில்லாத, விவசாய வேலைகளில் ஈடுபட்டு வந்த 14 பெண்கள் இணைந்து, 2018ம் ஆண்டு பிபி பாத்திமா மகளிர் சங்கத்தை உருவாக்கினர். இவர்களுக்கு 'சஹஜா சம்ருதா' எனும் கர்நாடகா ஆர்கானிக் விவசாயி நலச்சங்கத்தினர் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
இவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி, அனைவரும் சங்கத்தை உருவாக்கி, ஏற்கனவே செய்து கொண்டிருந்த விவசாய வேலைகளில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி, புதுமையான முறையில் பணிகளை தொடர்ந்தனர். இதன்படி, இவர்கள் பருத்தி, அரிசி, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிட்டு, இயற்கை உரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்தனர்.
இதன் மூலம் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், தானியங்களை ஆர்கானிக் கடைகளில் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இவர்களே சுயமாகவும் பல நிகழ்ச்சிகளில் கடைகள் அமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் தானியங்களில் உள்நாட்டு விதைகள் விற்பனை செய்யவும் துவங்கினர். முதலில், இவர்களிடமிருந்து விதைகள் வாங்க எந்த விவசாயிகளும் முன்வரவில்லை.
அச்சமயத்தில், தாங்கள் விற்பனை செய்யும் விதைகளை, தங்கள் தோட்டத்திலே பயிரிட்டு சாகுபடி செய்து அசத்தினர். இதை பார்த்த மற்ற விவசாயிகளும், விதைகளை வாங்க கூட்டம், கூட்டமாக வந்தனர். சூரிய சக்தி மூலம் இயங்கும் பதப்படுத்துதல் ஆலையையும் நிறுவினர். இதை பார்த்த பலரும் பெண்கள் குழுவை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், யு.என்.டி.பி., எனும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் எனும் சர்வதேச அமைப்பு, தார்வாட் பெண்களின் இயற்கை விவசாயம் முறை பற்றி கேள்விப்பட்டது. அவர்களின் பெயர் யு.என்.டி.பி.,யின் பல்லுயிர் பாதுகாப்புக்கான நோபல் பரிசு எனும் பூமத்திய ரேகை பரிசு போட்டியில் சேர்க்கப்பட்டது.
ரூ.8.50 லட்சம் இப்போட்டியில், 103 நாடுகளில் இருந்து, 700 இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர். இதில், இந்தியாவில் இருந்து தார்வாட் பெண்கள் பிபி பாத்திமா குழுவினரின் பெயரும் இடம்பெற்றது. இவர்களின் பெயர் சேர்க்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசு கடந்த 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. பரிசாக 8.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இது குறித்து, மகளிர் சங்க தலைவி ஹலேமானி கூறியதாவது:
தானியங்கள் வளர்ப்பதற்கு அதிக செலவு செய்ய தேவையில்லை. விதைகள், ஆர்கானிக் கடைகள், தானிய ரொட்டி, சத்து மாவு, மால்ட் ஆகியவற்றை இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். விரைவில், சூப்பர் மார்க்கெட் ஒன்றை உருவாக்க உள்ளோம். சர்வதே அளவிலான விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .