தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ 'கிரஹலட்சுமி' பணத்தில் போர்வெல் தோண்டிய ஈரவ்வா

 'கிரஹலட்சுமி' பணத்தில் போர்வெல் தோண்டிய ஈரவ்வா

 'கிரஹலட்சுமி' பணத்தில் போர்வெல் தோண்டிய ஈரவ்வா


ADDED : மே 17, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, கர்நாடக அரசு வழங்கும் 'கிரஹலட்சுமி' திட்டத்தின் நிதியுதவியை, பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்துவதால், அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது. பெண்ணொருவர் தனக்கு கிடைத்த உதவித்தொகையை சேமித்து வைத்து, தன் நிலத்தில் போர்வெல் தோண்டியுள்ளார்.

கர்நாடகாவில் 2023ல், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த போது, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. இவற்றில் கிரஹலட்சுமி திட்டமும் ஒன்றாகும். திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது, பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

* மாதம் ரூ.2,000

பணத்தை சேமித்து வைத்து, வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் வாங்கினர். ஒருவர் தன் மகனுக்கு முன் பணம் செலுத்தி, பைக் வாங்கி கொடுத்தார். பலர், தங்கள் கணவரின் அவசர தேவைக்கு உதவுகின்றனர். மூதாட்டி ஒருவர் தனக்கு கிடைத்த கிரஹலட்சுமி பணத்தில், ஊராருக்கு விருந்து கொடுத்தார். மற்றொரு பெண் தன் மருமகளுக்கு பேன்சி ஸ்டோர் வைத்து கொடுத்தார்.

விவசாய கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர், கிரஹலட்சுமி உதவித்தொகையை சேமித்து வைத்து, ஐஸ்கிரீம், குளிர்பான கடை வைத்தார். கோடைக்காலத்தில் திறந்ததால், வியாபாரம் அமோகமாக நடக்கிறது. இது போன்று பல பெண்கள் பணத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் முன்னேறுகின்றனர். அரசின் திட்டத்துக்கு அர்த்தம் கிடைத்துள்ளது.

ஹூப்பள்ளி மாவட்டம், கலகடகி தாலுகாவின், சூரஷெட்டிகொப்பா கிராமத்தில் வசிப்பவர் ஈரவ்வா அங்கடி. இவரது 2.5 ஏக்கர் விவசாய நிலம் வானம் பார்த்த பூமியாகும். மழையை நம்பியுள்ளது. மழை பெய்யாவிட்டால் விவசாயம் செய்ய முடியாது. எனவே நிலத்தில் போர்வெல் தோண்ட வேண்டும் என, ஈரம்மா அங்கடி விரும்பினார். பணம் இல்லாததால் மவுனமாக இருந்தார்.

* பெயர் பதிவு

இத்தகைய சூழ்நிலையில், மாநில அரசு கிரஹலட்சுமி திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தில் ஈரவ்வாவும் தன் பெயரை பதிவு செய்திருந்தார். மாதந்தோறும் தனக்கு கிடைத்த பணத்தை செலவிடாமல், சேமித்து வைத்திருந்தார். 54,000 ரூபாய் சேர்ந்தது. இதில் 50,000 செலவிட்டு நிலத்தில் போர்வெல் தோண்டினார். 220 அடி தோண்டும் போதே தண்ணீர் வந்தது. மிச்சமிருந்த 4,000 ரூபாய் உட்பட பல இடங்களில் கடன் வாங்கி மோட்டார் பொருத்தினார். நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரது கனவை, கிரஹலட்சுமி திட்டம் நனவாக்கியது.

இது குறித்து, ஈரவ்வாவின் மகன் ரமேஷ் கூறியதாவது:

எங்கள் நிலத்தில் போர்வெல் தோண்டுவது, என் தாயின் கனவாக இருந்தது. இதற்காக பல ஆண்டுகள் காத்திருந்தார். எங்களிடம் பணம் இல்லாததால், போர்வெல் தோண்ட முடியவில்லை. வானம் பார்த்த பூமியில் இருந்து, அவ்வளவாக வருவாய் கிடைக்காது. சில ஆண்டு சரியாக மழை பெய்யாவிட்டால், வறட்சி இருந்தால் பிழைப்பது மிகவும் கஷ்டம்.

நிறைய கஷ்டத்தை நாங்கள் அனுபவித்துள்ளோம். இப்போது என் தாயின் ஆசை நிறைவேறியுள்ளது. கடன் வாங்கி மோட்டார் பொருத்தினோம். விரைவில் கடனை அடைப்போம். கிரஹ லட்சுமி திட்டத்தை செயல்படுத்திய அரசுக்கு, எங்கள் நன்றிகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

.....பாக்ஸ்.....

சிறு துளி பெரு வெள்ளம்

மைசூரை சேர்ந்த மாணவி மாதுரி, நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 625 க்கு 624 மதிப்பெண் பெற்று, சாதனை செய்திருந்தார். இவரது வெற்றிக்கு பின், குடும்பத்தினர் அளித்த ஊக்கத்துடன், கிரஹலட்சுமி திட்டத்தின் பங்களிப்பும் உள்ளது.

இவரது தாயும், கிரஹலட்சுமி திட்டத்தின் பயனாளி. தனக்கு கிடைத்த உதவித்தொகையை, மகளின் கல்விக்கு பயன்படுத்தினார். கல்விக்கு என்னென்ன தேவையோ, அதை வாங்க பயன்படுத்தினார். அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைத்தால், வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதற்கு, மாணவியின் தாயும், ஈரவ்வாவும் சிறந்த உதாரணங்கள். 2,000 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் என, பலர் நினைக்கலாம். ஆனால் சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போன்று, இந்த தொகையை சேமித்து வைத்தால், அவசர நேரத்தில் உதவும் என்பதை, பெண்கள் நிரூபித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us