/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
களிமண்ணில் கலை நயம் காட்டும் ஜோதி
/
களிமண்ணில் கலை நயம் காட்டும் ஜோதி
ADDED : பிப் 23, 2026 04:40 AM

- நமது நிருபர் -
இன்றைய காலத்தில், நவீன பொருட்கள் வந்தாலும், களிமண் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களின் அழகே தனிதான். இதை தயாரிக்க பொறுமையும், கலையுணர்வும் அவசியம். இத்தகைய கலைத்திறன் கொண்டவர்களில், ஜோதியும் ஒருவர்.
காலம் மாறுவதை போன்று, மக்களின் ரசனைகளும் மாறுகின்றன. நவீனத்தை விரும்புகின்றனர். இதை உணர்ந்து கலைஞர்களும், தங்களின் கற்பனை குதிரையை தட்டி ஓட விடுகின்றனர். கைத்திறனை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்குகின்றனர். ஷிவமொக்கா நகரின், ஹாரனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ்; இவரது மனைவி ஜோதி.
மண் பாண்டங்கள் செய்வது, இவர்களின் குலத்தொழில். இதற்கு முன் தம்பதி சாதாரணமான மண் பாண்டங்கள், அகல் விளக்குகள், அலங்கார பொருட்கள் தயாரித்தனர்.
அவ்வளவாக வியாபாரம் நடக்கவில்லை. அதன்பின் ஜோதி தன கற்பனைத்திறனை பயன்படுத்தி, களி மண் பொருட்களுக்கு புது வடிவம் கொடுத்தார். இவருக்கு கணவரும் ஒத்துழைப்பு தருகிறார்.
திருவிழாக்கள், பண்டிகைகள், திருமணம் என, பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகவே ஜோதி விதவிதமான விளக்குகள் தயாரிக்கிறார்.
அஷ்ட லட்சுமி விளக்கு, துளசி விளக்கு உட்பட, பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கிறார். வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என, அனைத்து இடங்களிலும் இவரது விளக்குகளுக்கு, நல்ல மவுசு உள்ளது. ஆர்டர்கள் குவிகின்றன.
இவர் தயாரிக்கும் மேஜிக் விளக்கு, மிகவும் மாறுபட்டது. மற்ற விளக்குகளை போன்று, மேஜிக் விளக்குக்கு மேலிருந்து எண்ணெய் ஊற்ற வேண்டாம். விளக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து எண்ணெய் ஊற்றி, நடுவில் திரியை நனைத்து விளக்கை ஏற்றலாம். இதனால் நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணெய் அதிகம் செலவாகாது.
ஜோதி தயாரிக்கும் விளக்குகள், வீட்டு அலங்கார பொருட்களை, சுய உதவிக்குழு மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் விற்பனை செய்கிறார். இத்தகைய குடிசைத் தொழில்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஷிவமொக்காவின், மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., ஹேமந்த்குமார், ஜோதிக்கு சிறப்பான மார்க்கெட் வசதியை செய்து கொடுத்துள்ளார்.
கடந்த 2023ல் ஷிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைக்க, பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது, சிறப்பு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
அப்போது ஜோதி கண்காட்சியில் வைத்திருந்த அகல் விளக்குகளின் அழகு, சிறப்புத்தன்மையால் ஈர்க்கப்பட்டு, இவற்றை பிரதமர் மோடி விலை கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. மண் விளக்குகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்ற ஜோதிக்கு, தர்மஸ்தலாவில் 'மகளிர் சாதனையாளர்' விருது வழங்கி கவுரவித்தனர்.
தன் திறமை மூலம், வருவாயை அதிகரித்ததுடன், குலத்தொழிலையும் மங்காமல் காப்பாற்றி வருகிறார். கிராமத்து பெண்களுக்கும் திறமை உள்ளது. அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
ஜோதி கூறியதாவது:
நான் என் கணவரின் வீட்டிலேயே, குடிசைத்தொழிலை துவக்கினேன். என் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன், கடந்த 18 ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இந்த தொழில் எனக்கு திருப்தி அளிக்கிறது.
என் மாமனாரும், மாமியாரும் மண் பானைகள் தயாரித்து வந்தனர். உலகம் நவீனமாகியுள்ளது. களி மண்ணை வைத்து புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என, விரும்பினேன். நானும், என் கணவரும் பிடதியில் பயிற்சி பெற்று வந்து, தொழிலை துவக்கினோம். பல விதமான விளக்குகள் தயாரிக்கிறோம்.
நாங்கள் விளக்குகளை, இயந்திரம் பயன்படுத்தி தயாரிப்பது இல்லை. கைகளால் தயாரிக்கிறோம். பூஜை அறையில் தங்கம், வெள்ளி விளக்குகளுக்கு பதிலாக, மண் விளக்குகளை ஏற்றுவது, மிகவும் சிறப்பானது.
பழமையும், புதுமையும் கலந்து பொருட்களை தயாரிக்கிறோம். விளக்குகள் மட்டுமின்றி, சமையல் பாத்திரங்கள், கப், குடிநீர் பாட்டில், பூந்தொட்டிகள், வீட்டு அலங்கார பொருட்களையும் தயாரிக்கிறோம்.
பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்கிறோம். அதிக விலை நிர்ணயிக்காமல், குறைந்த விலைக்கு விற்கிறோம். இதனால், பொது மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

